சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பெண்ணை கன்னத்தில் அறைந்து குண்டர் போல் செயல்பட்ட தீட்சிதர் மீது. காவல்துறையினர் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடிவருகிறார்கள்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வ. உ. சி தெருவைச் சேர்ந்த செல்வகணபதி என்பவரின் மனைவி லதா ( 51 ) இவர் காட்டுமன்னார்கோயில் அருகேயுள்ள ஆயங்குடி ஆரம்ப சுகாதரநிலையத்தில் முதன்மை செவிலியராக பணியில் உள்ளார். இவரது மகன் ராஜேஷ்(21) பிறந்த நாளான சனிக்கிழமை மாலை அர்ச்சனை செய்வதற்காக சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்திலுள்ள முக்குருணி விநாயகர் கோயிலுக்கு வந்துள்ளார். அப்போது கோவிலில் இருந்த தீட்சிதர் தர்ஷனிடம் மகனுக்கு பிறந்தநாள் எனக்கூறி பூஜை சாமான்களை கொடுத்துள்ளார். பின்னர் மகன் பெயரை கூறுவதற்குள் தீட்சிதர் உள்ளே சென்று தேங்காயை மட்டும் உடைத்துவிட்டு தட்டை கொடுத்துள்ளார்.
அப்போது அந்தப் பெண் நான் மகன் பெயர், நட்சத்திரம், ராசி, எதையுமே கூறாத போது தாங்கள் எப்படி தேங்காயை மட்டும் உடைத்தீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது தீட்சிதர் ஏன் நீ வந்து உள்ளே செய்யேன் என ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் தீட்சிதர் தர்ஷன் அந்த பெண்மணியை கன்னத்தில் அறைந்து நெட்டிதள்ளியுள்ளார். இதனால் கீழே விழுந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சம்பந்தபட்ட தீட்சிதரிடம் ஞாயம் கேட்டு வாக்குவாதத்தில் இடுபட்டனர். அதற்கு தீட்சிதர் அகங்கார தோரனையில் பதில் கூறியுள்ளார். இது அங்கிருந்தவர்களுக்கு முகசுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர் அந்த பெண்ணை அங்கிருந்தவர்கள் சிதம்பரம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று புகார் அளித்துவிட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்னர். இது குறித்து சிதம்பரம் காவல்துறை ஆய்வாளர் முருகேசன் மற்றும் காவல்துறையினர் கோவிலுக்கு வந்துவிசாரணை செய்து சம்பந்தபட்ட தீட்சிதர் மீது ஐபிசி 294,323, பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து தேடிவருகிறார்கள். காவல்துறையினர் தேடுவதை அறிந்த தீட்சிதர் தர்சன் தலைமறைவாக உள்ளார். அவரது தந்தையை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்து வருகிறார்கள். இதனால் கோயில் தீட்சிதர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.