சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுக்கு இரு முறை ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன தேர் மற்றும் தரிசனம் விழாவும், மார்கழியில் ஆரூத்ரா தரிசனம் தேர் நடைபெறுவது வழக்கம். இந்த விழாக்களில் இந்தியாவின் அனைத்து பகுதியிலிருந்தும் லட்சகணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். இந்நிகழ்ச்சியில் தரிசனம் மற்றும் தேரில் வரும் சாமிகளை படம் எடுக்ககூடாது என்று கோவில் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
அதனையும் மீறி வெளியூர்களில் இருந்து யாராவது ஆர்வ மிகுதியால் சாமியை படம் எடுத்துவிட்டால் தீட்சிதர்கள் விலைஉயர்ந்த செல்போன்களை பிடுங்கி தேர்சக்கரத்தில் வைத்துவிடுவார்கள். இதனையும் மீறி கேட்டால் அவர்கள் ஒன்று கூடி தாக்கும் சம்பவமும் நடைபெற்றுள்ளது. இது போன்ற சம்பவம் தற்போது நடைபெற்ற தேர் தரிசன விழாவிலும் அரங்கேறியுள்ளது. எல்லா ஊர்களிலும் சாமியை படம் எடுப்பது போல் எடுத்து விலைஉயர்ந்த செல்போனை இழந்தவர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது.
இதற்கு மறாக சமூக வலைதளங்களில் நடராஜர், சிவகாமசுந்தரி சாமிகளை அபிஷேகம் செய்வதையும், தேர் மற்றும் தரிசன நிகழ்வின் போது மிக நெருக்கமாக எடுத்த படம், வீடியோ காட்சிகள் ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவின் போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பத்திரிகையாளர்கள் செய்திக்காகவும், வெளியில் இருந்து வரும் பக்தர்கள் தூரத்தில் இருந்து சாமியை எடுக்கும் புகைபடத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தீட்சிதர்களுக்கு இது போன்ற காட்சிகள் வைரல் ஆகுவது தெரியாதா? என்று வலைதளத்தை பார்க்கும் அனைத்து பொதுமக்களுக்கும் கேள்வி எழுப்புகிறார்கள்.
மேலும் சில தீட்சிதர்கள் அவர்கள் செல்போனில் பிடிக்கும் படத்தை கட்டளைகாரர்களுக்கு அனுப்புகிறார்கள் அதனால் தான் இது போன்ற துல்லியமாக படம் வெளியே வருகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதனை கடந்த 2016 ஆண்டில் நடைபெற்ற திருவிழாவின் போது நக்கீரனில் புறக்கனிக்கப்படும் தமிழ் அர்ச்சனை என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டு இருந்தோம் இதற்கு தீட்சிதர்கள் நாங்க படம் எடுப்பது இல்லை என மறுத்தனர்.
இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி நடைபெற்ற தரிசன விழாவின் போது அதிகாலை நடைபெற்ற மகாஅபிஷேகத்தை சாமி இருக்கும் இடத்திற்கு எதிரே தீட்சிதர்களின் கட்டளைதாரர்கள் அமரும் இடத்தில் இருந்து எடுத்தது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைபல லட்சம் பேர் டவுன்லோடு செய்து செல்போனில் வைத்துள்ளனர். இதனை யார் எடுத்தது என்ற விபரம் தெரியவில்லை.
இதனை பார்க்கும் நெட்டிசைன்கள் நூறு அடி தூரத்திற்கு மேல் இருந்து படம் எடுப்பதை கண்காணித்து செல்லை பிடுங்கும் தீட்சிதர்களுக்கு அபிஷேகம் நடைபெறும் இடத்திற்கு அருகில் இருந்து எடுத்த வீடியோ யார் எடுத்தது என்று தெரியாதா என்ன? என்ற கேள்வியை எழுப்பி தீட்சிதர்களின் ஆசிர்வதம் இல்லாமல் இது போன்ற வீடியோவை எடுக்கமுடியாது என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் இது என்னடா நடராஜருக்கே வந்த சோதனை என்று பதிவுசெய்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கடலூர், சிதம்பரம் செய்தியாளர்கள் சாமியை தூரத்திலிருந்து படம் எடுத்தபோது எதிர்ப்பு தெரிவித்து செய்தியாளர்களின் புகைப்பட கருவிகள் துவம்சம் செய்யப்பட்டு தாக்குதல் நிகழ்வும் நடைபெற்றது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் பத்திரிகை முதலாளி கருணையால் வாபஸ் பெறப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
இதுகுறித்து தீட்சிதர் ஒருவர் இங்கு மூலவரே மக்களுக்கு காட்சி அளிப்பதால் படம் எடுக்க எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. அபிஷேக வீடியோவை பார்த்து நாங்களும் அதிர்ச்சி அடைந்தோம். அவ்வளவு கண்காணிப்பாக இருந்தும் இது எப்படி எடுத்தார்கள் என்று தெரியவில்லை. இதுகுறித்து தீட்சிதர்கள் கூட்டம் நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை செய்யவுள்ளோம் என்றார்.