வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தலுக்கான ஏற்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகளைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் பணம் பட்டுவாடா செய்தல், பணம் மற்றும் பரிசுப் பொருட்களைக் கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளைத் தடுக்கும் விதமாக, தமிழகம் முழுவதும் 702 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு, வீடியோ பார்வையிடும் குழு, கணக்கீட்டுக் குழு ஆகிய குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்களின் பணிகளை வீடியோ எடுப்பதற்காகவும், வாக்குச்சாவடி மற்றும் வாக்கு எண்ணிக்கையின்போது வீடியோ எடுப்பதற்காகவும், அந்தந்த பகுதியில் உள்ள வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர்களைப் பணிக்கு அமர்த்துவது வழக்கமாகும்.
ஆனால் தற்போது தேர்தல் ஆணையம் வீடியோ எடுக்கும் உரிமையைத் தனியார் நிறுவனத்திற்கு வழங்கியுள்ள நிலையில், 8 மணி நேரத்திற்கு தேர்தல் ஆணையம் 2,050 ரூபாய் வழங்குவதாகவும், அவ்வாறு வழங்கப்படும் தொகையினை தனியார் நிறுவனம் முழுவதுமாக வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர்களுக்கு வழங்காமல், ரூபாய் 600 மட்டும் கட்டாயப்படுத்தி வழங்குவதாகவும் வீடியோ ஒளிப்பதிவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த வேப்பூர் தாலுகாவிற்கு உட்பட்ட 50-க்கும் மேற்பட்ட வீடியோ மற்றும் புகைப்பட ஒளிப்பதிவாளர்கள், விருத்தாச்சலம் சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் அவர்கள், தேர்தல் பணியில் தனியார் நிறுவனத்திற்கு வீடியோ, ஃபோட்டோ எடுக்கும் உரிமை கொடுக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு ரத்து செய்யாவிட்டால் புகைப்பட கலைஞர்கள் மற்றும் அவரது உறவினர்கள் என அனைவரும் தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கரோனா காலகட்டத்தில் வேலைவாய்ப்பு, சுப நிகழ்ச்சிகள் எதுவுமின்றி பெரிதும் பாதிப்படைந்துள்ள நிலையில், தற்போது தேர்தல் ஆணையம் தங்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் விதமாக செயல்படுகிறது என்றும், தேர்தல் ஆணையம் புகைப்பட கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தனியார் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ஒட்டுமொத்தமாக தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட நேரிடும் என்றும் கூறியுள்ளனர்.