உலகின் மிகப்பெரும் வைரம் அறுத்து மெருகேற்றும் மையம் சூரத்தில் அமைந்துள்ளது. இவர்கள் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வைரங்களை தயாரித்து விற்பனை செய்பவர்கள். கடந்த பிப்ரவரி 25, 26ஆம் தேதி என இரு தினங்களாக, புதிய வைரங்கள் மும்பை வைரத் தரகர்களால் வந்துகுவிவதால் ப்ளஸ் 11 வகை வைரங்களின் விலை 30 சதவிகிதம் அளவுக்கு சரிந்திருப்பதாக சூரத் வைர உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து விசாரித்தபோது, தமிழ்நாட்டைச் சேர்ந்த சில தரகர்களிடமிருந்து புதிய வைரங்கள் குவிவதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுதொடபாக விசாரித்தபோது, ''2016 நவம்பர் 8 பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது தமிழ்நாட்டில் இருந்து பணத்தைக் கொண்டு வந்து இரண்டு லட்சம் கேரட் அளவுக்கு வைரமாக மாற்றினார்கள். இது ஜெயலலிதா தரப்பினரால் மாற்றப்பட்டுள்ளது'' என்றும் கூறுகிறார்கள்.
மும்பையைச் சேர்ந்த ஒரு வைரத் தரகர், “அமெரிக்கா மற்றும் சீனாவில் நிலவும் பொருளாதாரச் சூழல்களால் வைரச் சந்தை மிகவும் கவனத்துடனே செயல்படுகிறது. மெருகேற்றப்பட்ட வைரத்தின் விலை வீ்ழ்ச்சி கண்டிருப்பதுடன், தமிழ்நாட்டிலிருந்து அதிகளவில் வரும் ப்ளஸ் 11 வைரத்தின் வரவால் விலை மேலும் சரிந்து கிட்டத்தட்ட 30 சதவிகிதமளவுக்கு விலைகுறைந்திருக்கிறது” என நிலவரத்தை விளக்கும் அவர், “இந்த ப்ளஸ் 11 வைரங்கள் 2016-ல் எக்ஸ் மதிப்பில் வாங்கப்பட்டன. ஆனால் தரகர்கள் அதை தற்போது குறைந்த விலைக்கு விற்கின்றனர். இதனால் வைர உற்பத்தி மையங்கள் இந்த விலைக்குறைப்பு யுத்தம் மற்றும் வரும் நாட்களில் வைரச் சந்தையின் மேல் இது ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து கவலை அடைந்துள்ளன.”
சூரத்தின் மகிதாபுர வைர சந்தையைச் சேர்ந்த தரகர் மெஹ்சி பலாலா, “ப்ளஸ் 11 அளவிலான வைரங்கள் சந்தையில் பிரபலமான வைரமாகும். சூரத் இத்தகைய வைர உற்பத்திக்குப் பெயர்பெற்றது. இவை பெரும்பாலும் நகைகளில் பயன்படுத்தப்படும். ஆனால் இத்தனை மொத்தமாய் வைரம் விற்பனைக்கு வந்தால், நிச்சயம் விலையில் இது சரிவை ஏற்படுத்தும்.” என்கிறார்.
சூரத் வைரக் கழகத்த்தின் தலைவரான பாபு குஜராத்தி, “செல்வந்தர்கள் பணமதிப்பிழப்பின்போது தங்கள் கறுப்புப் பணத்தை நீண்ட கால முதலீடாகக் கருதி வைரத்தில் முதலீடு செய்தனர். பணமதிப்பிழப்பின்போது பல அரசியல்வாதிகளுக்கு வைரத் தரகர்கள் உயர்தர வைரத்தை விற்ற நிகழ்வுகள் நிறைய நடந்திருக்கின்றன. அதில் இது மிக முக்கியமான உதாரணம். தமிழ்நாட்டின் மிகப்பெரும் அரசியல்வாதி 2 லட்சம் காரட்டுக்கும் அதிகமான வைரத்தை வாங்கி, தற்சமயம் அது மும்பை தரகர்களால் விற்பனைக்கு வந்திருக்கிறது. இதனால் உள்ளூர்ச் சந்தையில் விலைச் சரிவு ஏற்பட்டுள்ளது” என்கிறார்.
ப்ளஸ் 11 வகை வைரங்கள் ஒரு கேரட் ரூபாய் 50 ஆயிரம் வரை விற்கப்படுவதால் இரண்டு லட்சம் கேரட் வைரங்களின் மதிப்பு சுமார் ரூபாய் 1000 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஜெயலலிதா செப்டம்பர் 22ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்ததால் அவருக்காக வைரங்கள் வாங்கியது யார்? தற்போது அந்த வைரங்களை விற்பனை செய்வது யார்? பண மதிப்பிழப்பு நடவடிக்கை முன்கூட்டியே இவர்களுக்கு தெரியுமா? நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் இந்த வைரங்கள் விற்பனை செய்யப்படுவது தேர்தல் செலவுகளுக்காகவா என்று விசாரணை நடத்த வேண்டும் என்று பல தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.