திமுக செயல் தலைவரான ஸ்டாலின் பிறந்த நாளைமுன்னிட்டு இளைஞர்கள் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு பேச்சாளராக திண்டுக்கல் ஐ.லியோனி கலந்து கொண்டு பேசும்போது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே இடத்தில் பேசிய அமைச்சர் சீனிவாசன், கடந்த ஆறு மாதங்களாக உங்கள் இடத்தில் அம்மா இட்லி சாப்பிட்டாங்க, சட்னி சாப்பிட்டாங்க என பொய் சொன்னோம். அதற்காக எங்களை மன்னித்து விடுங்கள். இனிமேல் பொய் சொல்லமாட்டோம் என்று உங்களிடம் மன்னிப்பு கேட்டார். அது எல்லாம் ஒரு பொழப்பா. அதற்கு பேசாமல் இங்குள்ள வெள்ள விநாயகர் கோவிலில் பிச்சை எடுத்து விட்டு போகலாம்.
எந்த நேரத்தில் சின்னம்மா நம்மை கழட்டி விடுமோ என்ற பயத்திலேயே இந்த ஆட்சி நடக்கிறதே தவிர, மக்களுக்காக நடக்கவில்லை. எதிர் கட்சியையும் செயல்பட விடுவதில்லை. எதிர்கட்சி சிறப்பாக செயல்பட்டால்தான் நாடு முன்னேறும். ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் ரூபாய் நோட்டு போல் இருக்க வேண்டும்.
ஆறு மாதமாக அம்மாவை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் வைத்து கொண்டு, இட்லி சாப்பிட்டாங்க, அது சாப்பிட்டாங்க என்று எல்லாம் செய்தி தொடர்பாளர்கள் பொய் சொன்னார்களே தவிர, யாரும் பார்க்கவில்லை. ஆனால் முதன் முதலில் எங்கள் தலைவர் தான் அந்த அம்மா குணம் அடைந்து மீண்டும் கட்சி பணியாற்ற வர வேண்டும் என்றார்.
அதன் பின்னர் ஸ்டாலினும் பார்க்க போனார். ஆனால் பார்க்க விடவில்லை. ஆளுநரையே நாங்க பார்க்க விடவில்லை. உங்களை மட்டும் பார்க்க விடுவோமோ என திருப்பி அனுப்பி வைத்தனர். ஆனால் இப்ப அந்த சின்னம்மா மூலம் பதவிக்கு வந்த பழனிச்சாமி அந்த வீட்டு எழவுக்கு கூட போகாமல் பயந்து பயந்து ஆட்சி நடத்தி வருகிறார்.
அந்த அம்மா சமாதியில் மூன்று முறை சின்னம்மா அடித்ததை எல்லோரும் பார்த்திருப்பீர்கள். அது எதற்காக அடித்தார் என்று தெரியுமா? நீ நிம்மதியா இங்கே உள்ள இருக்க, நான் நிம்மதி இழந்து ஜெயிலில் இருக்கிறேன். நீ தனியா கூட போகலாம். ஆனால் நான் போலீஸ் இல்லாமல் வர முடியாது. ஒ.பி.எஸ். ஒரு முட்டாள். அதனால் பன்னீர் வாங்கிடாதீங்க என சொல்லிதான் அடித்தாங்க. இறந்த பிறகு அடிவாங்கின ஒரே முதல்வர் அம்மாதான்.
சுவீட்ஸ் பேங்கில் இருக்கிற பணத்தை எடுத்து உங்களுக்கு எல்லாம் 15 லட்சம் போடுகிறேன் என்று மோடி சொல்லி விட்டு, இருந்த 500, 1000 நோட்டுகளை செல்லாமல் செய்து விட்டார். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருகிறேன் என்றும் ஏமாற்றிவிட்டார். தற்பொழுது அரசியலுக்கு வந்துள்ள ரஜினி, கமல் இரண்டு நடிகர்களுமே நல்ல நடிகர்கள் தான். ஆனால் மக்கள் பிரச்சனையை பார்க்காமல் இமயமலையில் குதிரையில் போகிறார். மற்றொருவர் கொள்கை என்னவென்றே தெரியாமல் பேசி வருகிறார்.
ஆனால் ஸ்டாலின் அப்படி இல்லை. அனிதா பிரச்சனையை கேள்விபட்ட உடனே இரவோடு இரவாக சென்று அனிதா இறுதி ஊர்வலம் வரை இருந்து விட்டு போனவர். அப்ப எல்லாம் இந்த ரஜினி, கமல் எங்கே போனார்கள். நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வர முடியாது. 29 எம்எல்ஏகளை வைத்துகொண்டு விஜயகாந்த் எதிர்கட்சி தலைவராக இருந்தவர். ஒரு தடவை மட்டும் சட்டமன்றத்திற்கு வந்து கைநீட்டி பேசினார். அதோடு அவரும், அவரது கட்சியும் காணாமல் போய் ஜென்மத்திற்கும் தலை காட்ட முடியாமல் இருக்கிறார்.
அதுபோல் டி.ஆர். கட்சியில் அவரும் அவரது மனைவியும் மட்டும் தான் உள்ளனர். சரத்குமார் கட்சியான சமத்துவ மக்கள் கட்சியும் இரண்டாக போய்விட்டது. எம்.ஜி.ஆர் வாரிசு என சொல்லி வந்த பாக்கியராஜ் கட்சி ஆரம்பித்து வீணாகி போய்விட்டார். இப்படி நடிகர்கள் எல்லாம் கட்சி ஆரம்பித்து வீணாகி போன வரலாறு இருக்கு. ஆனால் எங்கள் தலைவர் சினிமாவிலிருந்து வந்தாலும் கூட அரசியல் சாணக்கியர். எம்.ஜி.ஆரை அரசியலுக்கு கொண்டு வந்தவர் எங்க தலைவர் தான் என்று கூறினார்.