Skip to main content

உயிரைக் குடித்த நிலத்தகராறு; கொலையில் முடிந்த சொத்து பிரச்சனை...

Published on 30/06/2021 | Edited on 30/06/2021
A land dispute that turned into a tragedy ... a relative was passed

 

விழுப்புரம் அருகே உள்ளது குச்சிப்பாளையம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் 45 வயது வரதராஜ். விவசாயியான இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினரான ஜானகிராமன் (45) என்பவருக்கும் நில பிரச்சனை ஏற்பட்டுள்ளது. உறவினர்களான இவர்கள் இருவருக்கும் இடையே பூர்வீக சொத்து சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. தென் குச்சிபாளையம்  கிராமத்தில் இவர்களுக்குச் சொந்தமான பூர்வீக நிலம் 7 சென்ட் இருந்துள்ளது. இந்த நிலத்தை யார் பயிர் செய்வது என்பதில் இருவருக்கும் இடையே கடந்த 15 வருடங்களாக பிரச்சனை நடந்து வந்துள்ளது.

 

நிலத்தை சரிசமமாகப் பிரித்துத் தரக்கோரி வரதராஜனிடம் ஜானகிராமன் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் இரு வீட்டாருக்கும் இடையே அவ்வப்போது பிரச்சனைகள் நடந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜானகிராமனுக்கும் வரதராஜனுக்கு இடையே மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வரதராஜன் இரும்பு கம்பியால் ஜானகிராமனை தாக்கியுள்ளார். இதில் ஜானகிராமன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.

 

உடனடியாக அப்பகுதி மக்கள் அவரை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவரது உறவினர்கள் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற விழுப்புரம் தாலுகா போலீஸார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து வரதராஜனை கைது செய்துள்ளனர். 


 

சார்ந்த செய்திகள்