ஈரோடு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக இருப்பவர் சக்திகணேசன் IPS. அவ்வப்போது புதிய புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தற்போது பெண்களுக்கு உதவும் வகையில் லேடீஸ் பர்ஸ்ட் என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளார்.
ஏற்கனவே ஈரோடு மாவட்டத்தில் முதியோர்களுக்கு உதவும் வகையில் மாவட்ட காவல்துறை சார்பில் ஹலோ சீனியர்ஸ் திட்டம் கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. அதற்காக பிரத்யேக செல்போன் எண் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முதியவர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினை குறித்து காவல் நிலையம் செல்லாமலேயே கைபேசி மூலம் தொடர்பு கொண்டு தங்களுக்குரிய பிரச்சனைகளை போலீசாரிடம் தெரிவித்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து தற்போது ஈரோடு மாவட்டத்தில் பெண்களுக்கு உதவும் வகையில் தொடங்கப்பட்டது தான் லேடீஸ் பர்ஸ்ட் என்ற திட்டம். இதற்காக பிரத்தியோக தொலைபேசி எண் 9655220100 ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை இன்று ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்த விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, "பெண்கள் தங்களுக்கோ தங்களை சார்ந்தவர்களுக்கோ ஏற்படும் பிரச்சினை குறித்து மேற்கண்ட எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் காவல்துறையினர் விரைந்து சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வார்கள். புகார் செய்பவர்களின் பெயர் மற்றும் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். இந்த தொலைபேசி எண் 24 மணி நேரமும் செயல்படும். புகார் கொடுத்த 24 மணி நேரத்திற்குள் புகார்தாரருக்கு உரிய நிவாரணம் அழைக்கப்படும். பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினை குறித்து இந்த செயலியை மட்டும் இல்லாமல் அருகில் உள்ள காவல் நிலையத்திலும் புகார் அளிக்கலாம். இந்த நம்பர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு எனது கண்காணிப்பில் இது செயல்படும். எனவே பெண்கள் இதனை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.
சமூக விரோதிகளிடம் ஏற்படும் பிரச்சனை மட்டுமல்ல குடும்பத்தில் சாதாரண வாய் தகராறு ஏற்பட்டு கணவன் மனைவியை அடித்து விட்டாலும் இந்த எண்ணுக்கு அழைத்தால் போலீஸ் வீடுதேடி வரும்... இனி கணவன்மார்கள் மனைவிகளிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும் இதை சொல்பவர்கள் ஆண் போலீசார் தான்.