
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கொம்மேபள்ளி அருகே உள்ள அனுமந்தபுரத்தை சேர்ந்தவர் முனிராஜ் (34). விவசாயியான இவர் சொந்தமாக டெம்போ வாகனம் வைத்து ஓட்டி வந்தார். மேலும், சொந்த ஊரில் ஒரு குவாரியில் கல் உடைக்கும் தொழிலும் செய்து வந்தார்.
கடந்த 13ம் தேதி, இரவு 8.30 மணியளவில் வீட்டு வாசலில் நின்றிருந்தார். அப்போது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது. இச்சம்பவம், சுற்றுவட்டார கிராமங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தனப்பள்ளி காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சடலத்தை உடற்கூறாய்வு செய்ய ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உடற்கூறாய்வு முடிந்த பிறகு சடலம், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சடலத்தை பெற்று சென்ற உறவினர்கள் அனுமந்தபுரம் & கெலமங்கலம் சாலையில் கிடத்தி, கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி திடீரென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் விரைந்து வந்து அவர்களை சமாதானம் செய்ததை அடுத்து, போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
காவல்துறை விசாரணையில், அனுமந்தபுரத்தை சேர்ந்த போடியப்பா (20), ஹரீஷ் (25), சீனிவாசன் (22), முனிராஜ் (26), மாதேஸ்வரன் (29) ஆகியோருக்கும் கொலையுண்ட முனிராஜிக்கும் குவாரியில் கல் உடைப்பது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது தெரிய வந்தது.

அதை மனதில் வைத்துக்கொண்டுதான் மேற்கண்ட நபர்கள் முனிராஜை தீர்க்கட்டி இருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் ஐந்து பேரையும் வெள்ளியன்று (மே 15) கைது செய்தனர்.
கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தில், ''கடந்த சில நாட்களுக்கு முன்பு முனிராஜிக்கும் எங்களுக்கும் தொழில் நிமித்தமாக தகராறு ஏற்பட்டது. இதனால் நாங்கள் அவர் மீது கடும் கோபத்தில் இருந்தோம். அவரை தீர்த்துக்கட்டினால்தான் கல் குவாரியில் நாங்கள் இடையூறின்றி தொழில் செய்ய முடியும் என்ற முடிவுக்கு வந்தோம். அதனால்தான் முனிராஜை திட்டமிட்டு கொலை செய்தோம்,'' என்று வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.