
தென்காசி டவுன் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் கற்பகராஜா உள்ளிட்ட போலீசார் நேற்றிரவு பழைய பேருந்து நிலையம் அருகே வாகன சோதனை செய்துள்ளார். அது சமயம் அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்திச் சோதனை செய்ததில் மறைந்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ எடை கொண்ட ஆம்பர் கிரீஸ் எனப்படும் திமிங்கலங்களின் கழிவுகள் சிக்கியிருக்கின்றன. அதனையும், வாகனத்தையும் பறிமுதல் செய்த இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அதனைக் கடத்தி வந்த குமரி மாவட்டம் குலசேகரத்தைச் சேர்ந்த ஜார்ஜ் மைக்கேல் ரோஸ், நெல்லை தாழையூத்துப் பகுதியின் மோகன் இருவரையும் கைது செய்திருக்கிறார்.
பிடிபட்டது கடல் வாழ் உயிரினங்களைச் சார்ந்தது என்பதால் அவர்களையும், வாகனம் மற்றும் ஆம்பர் கிரீஸ் உள்ளிட்டவைகளையும் கடையநல்லூர் வனச்சரக அலுவலரிடம் ஒப்படைத்தனர். கடத்தலின் போது கைப்பற்றப்பட்ட 2 கிலோ ஆம்பர் கிரீஸ், வாசனை திரவியம் தயாரிப்புக்காக கேரளாவுக்கு கொண்டு செல்வதாக பிடிபட்டவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இது சர்வதேச சந்தையில் அதிக மதிப்புமிக்கது. அதன் விலை தோராயமாக 3.5. கோடியாகும் என்கிறார்கள் மாவட்டக் காவல்துறையினர். மேலும் இந்த ஆம்பர் கிரீஸ் என்பது கடல் வாழ் உயிரினமான திமிங்கலங்கள் வெளியேற்றும் கழிவு வகை ஆகும். இவை தடை செய்யப்பட்டவை, விலை மதிப்புள்ள அவைகள் சேகரிக்கப்பட்டு கடத்தப்படுகின்றது. கடத்தப்பட்ட ஆம்பர் கிரீஸ் தொடர்பான விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.