சூளகிரி அருகே, ஆவேசமாக சுற்றித்திரியும் ஒற்றை யானை, கடந்த 5 நாள்களில் அடுத்தடுத்து மூன்று பேரை தாக்கி கொன்றதால், சுற்று வட்டார கிராம மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகேயுள்ள ஏ.செட்டிப்பள்ளி பகுதியில் முகாமிட்டுள்ள ஒற்றை யானை, இரவு நேரங்களில் சுற்று வட்டார கிராமங்களுக்குள் புகுந்து, பயிர்களை நாசம் செய்து வருகிறது. இந்த யானை, கர்நாடகா மாநிலம் கே.ஜி.எஃப். வனப்பகுதியில் இருந்து உணவு தேடி, சூளகிரி காட்டுப்பகுதிக்குள் வந்திருப்பது தெரிய வந்துள்ளது.
கடந்த 16- ஆம் தேதி காலை, புலியரசி கிராமத்தை சேர்ந்த முனிராஜ், ஜோகீர்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோர் ஏ.செட்டிப்பள்ளி பகுதியில் உள்ள அவர்களுடைய விவசாய நிலத்திற்கு சென்றனர். அப்போது, புதர் பகுதிக்குள் மறைந்து இருந்த ஒற்றை யானை, திடீரென்று வெளியே வந்து இருவரையும் துரத்திச்சென்று தாக்கியது.
யானை தாக்கியதில் பலத்த காயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து, அந்த ஒற்றை யானையை கர்நாடகா மாநிலம் கே.ஜி.எஃப். வனப்பகுதிக்குள் விரட்ட, வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். அப்போது, தக்காளி தோட்டத்திற்குள் பதுங்கியிருந்த ஒற்றை யானை, மீண்டும் ஏ.செட்டிப்பள்ளி வனப்பகுதிக்குள் புகுந்ததால் அதை விரட்டும் பணியில் பின்னடைவு ஏற்பட்டது.
மீண்டும் நேற்று முன்தினம் சூளகிரி அருகே, ஆபிரி காட்டுப் பகுதியில் விவசாயி முனுசாமி என்கிற அப்பையா (57) யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். ஆக. 18- ஆம் தேதியன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.
குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவரைப்பற்றிய விவரங்கள் தெரியவில்லை. இதற்கிடையே, ஆபிரி காட்டுப்பகுதியில் அப்பையா சடலமாக கிடப்பதாக கிராமத்தினர் சூளகிரி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சடலத்தை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஏ.செட்டிப்பள்ளி காட்டில் இருந்து நள்ளிரவில் ஒற்றை யானை வெளியேறி சுற்றித்திரிந்தபோது, அந்த வழியாக சென்ற அப்பையாவை யானை மிதித்து கொன்றிருப்பது தெரிய வந்துள்ளது. அப்பையா, ஆபிரியில் உள்ள தனது விவசாய நிலத்தை கவனித்துக்கொண்டு, அங்கேயே தனியாக குடிசை போட்டு வசித்து வந்தார். இது ஒருபுறம் இருக்க, அந்த ஒற்றை யானை, ஆக. 19- ஆம் தேதி, ஓசூர் பேரண்டபள்ளியில் உள்ள விவசாய நிலங்களில் ஆவேசமாக சுற்றித்திரிந்ததை ஊர் மக்கள் பார்த்துள்ளனர்.
கடந்த ஐந்து நாட்களில் மூன்று பேரை தாக்கி கொன்ற ஒற்றை யானை, ஆக்ரோஷத்துடன் சுற்றித்திரிவதால் ஏ.செட்டிப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். அந்த ஒற்றை யானையை, கும்கி யானையை மூலமோ அல்லது மயக்க ஊசி செலுத்தியோ பிடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.