கேரளாவில் பெய்த அதீத கனமழை காரணமாக அண்மையில் கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400க்கும் பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து பல நாட்களாக அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதன் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள மலை மாவட்டங்களைக் கண்காணிக்க தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த அரசாணையில் தமிழகத்தில் மலைக் கிராமங்கள் அமைந்துள்ள மாவட்டங்களில் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக திண்டுக்கல், நீலகிரி, கோவை, நெல்லை, கன்னியாகுமரி என மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களைக் கண்காணிக்க வேண்டும்' என உத்தரவு கொடுக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து நீலகிரியில் நிலச்சரிவு அபாயம் மற்றும் அதற்கான சாத்தியக்கூறு உள்ள இடங்களை கண்டறியும் பணி நடைபெற்று வருவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நீலகிரி கூடலூர் நகராட்சிக்குட்பட்ட கோக்கால் பகுதியில் கட்டிடங்கள் மண்ணில் புதையத் தொடங்கியது அந்த பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து இந்திய புவியியல் துறை வல்லுநர்கள் அங்கு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த மாதம் கோக்கால் பகுதியில் அதிக கனமழை பொழிந்த பொழுது வீடுகள் மற்றும் முதியோர் காப்பகத்தின் கட்டிடங்கள் 8 அடி ஆழத்தில் புதைந்தது. அதேநேரம் கேரளாவில் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டது பரபரப்பு ஏற்படுத்தி இருந்த நிலையில், இந்த சம்பவமும் கோக்கால் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. நிலச்சரிவு ஏற்படுமா என்ற அச்சத்தில் பல்வேறு பகுதிகளில் தஞ்சம் அடைந்திருந்தனர். இந்நிலையில் இந்திய புவியியல் துறை வல்லுநர்கள் நான்கு பேர் கொண்ட குழு ஆய்வுப் பணியை தொடங்கினர்.
அதில் பூமிக்கு அடியில் நீரோட்டம் செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 20 நாட்கள் முழு ஆய்வு நடத்தப்பட்டு அதற்கான முழு அறிக்கை மாவட்ட நிர்வாகத்திடம் விரைவில் புவியியல் வல்லுநர்கள் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நிலப்பரப்பில் பிளவு ஏற்படுவதற்கான காரணம்; கட்டிடங்கள் பூமிக்குள் புதைவது ஏன்?; புதிய கட்டடங்களை இந்த பகுதிகளில் கட்டலாமா?; மக்கள் வாழத் தகுதியான இடமா?; ஏற்கனவே இங்கு கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ள கட்டிடங்கள் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? என்ற பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அந்த அறிக்கை இருக்கும் என்று கூறப்படுகிறது.