பெரியார் பல்கலை பாதுகாப்பு குழு கூட்டம் ஞாயிறன்று (செப். 27) காணொளி வாயிலாக நடந்தது. குழுவின் தலைவர் செந்தாமரை தலைமையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் பெரியார் பல்கலை நிர்வாகம் மேற்கொண்டு வரும் ஊழியர் விரோதப் போக்கை கண்டித்தும், பல்கலையின் நிர்வாகக் குளறுபடிகளை கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இது தொடர்பாக குழு நிர்வாகிகள் கூறியது: "பெரியார் பல்கலையின் இப்போதைய துணைவேந்தர் குழந்தைவேலின் பதவிக்காலம் வரும் 2021- ஆம் ஆண்டு ஜனவரி 7- ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. துணைவேந்தர் பதவிக்காலம் முடிவுக்கு வருவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே, புதிய துணைவேந்தரை நியமிப்பதற்கான 'சர்ச் கமிட்டி' எனப்படும் தேடுதல் குழுவை அமைக்க வேண்டும். துணைவேந்தர் குழந்தைவேலின் ஓய்வுக்காலத்திற்கு இன்னும் மூன்று மாதங்களே முழுமையாக இருக்கும் நிலையில், இதுவரை தேடுதல் குழு அமைக்கப்படாமல் உயர்கல்வித்துறை அலட்சியமாக இருப்பது கண்டிக்கத்தக்கது.
இந்த பல்கலையில், பதிவாளர், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர், நிதி அலுவலர், தொலைதூரக் கல்வி இயக்குநர் ஆகிய முக்கிய பதவியிடங்களில் இதுவரை நிரந்தர நபர்களை நியமிக்காமல், கடந்த 3 ஆண்டுகளாக பொறுப்பு அதிகாரிகளையே கொண்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்படி முக்கிய பதவிகளில் எல்லாம் இன்சார்ஜ் ஆட்களை கொண்டு செயல்படுவதற்கு அப்பதவியிடங்களையே ஒழித்து விடலாமே? இதனால் பல்கலையின் முக்கிய முடிவுகளை துணைவேந்தரே தன்னிச்சையாக எடுத்து வருகிறார். பல்கலையின் உயர் பதவிகளில் தகுதியான நபர்களை வெளிப்படைத் தன்மையுடன் நியமிக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்த்துறையில் பேராசிரியராக பணியாற்றி வரும் பெரியசாமி என்பவர், போலி அனுபவ சான்றிதழ்களை கொடுத்துதான் பணியில் சேர்ந்தார். அதற்கு உரிய ஆதாரங்கள் இருந்தும்கூட பல்கலை நிர்வாகம் அவர் மீது எந்த வித விசாரணையும் மேற்கொள்ளாமல் மெத்தனமாக செயல்படுகிறது. முறைகேடாக பணியில் சேர்ந்த பெரியசாமி மீது காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொகுப்பூதிய பணியாளர்கள் சிலர், எந்தவித முகாந்திரமும் இல்லாமல் தன்னிச்சையாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களிடம் உரிய விசாரணை நடத்தி, மீண்டும் பணியில் அமர்த்த துணைவேந்தர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி, சில நிர்வாகப் பணியாளர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் விதிகளுக்கு புறம்பாக வழங்கப்பட்டுள்ளது. அவற்றை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு பெரியார் பல்கலை பாதுகாப்புக்குழு நிர்வாகிகள் கூறினர்.
இக்கூட்டத்தில் உறுப்பு சங்க பொறுப்பாளர்கள் சரவணன், அரசு, சக்திவேல், பேராசிரியர் வைத்தியநாதன், கிருஷ்ணவேணி, கலைமணி, வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டு, ஆலோசனைகள் வழங்கினர்.