திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள பெருமாள்மலை வனபகுதிக்குள் 500 ஏக்கருக்கும் மேலாக எரிந்து வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் பணியில், வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பெருமாள்மலை வனப்பகுதிகளான தோகைவரை, மயிலாடும்பாறை மற்றும் மச்சூர் வனப்பகுதிகளில் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. கடந்த வியாழன்கிழமை இரவு முதல் மச்சூர் வனப்பகுதியில் எரியத் தொடங்கிய காட்டுத் தீ, இன்று காலை வரை பல்வேறு பகுதிகளுக்கு பரவி உள்ளது. பெரும் பரப்பளவில் எரியும் காட்டுத் தீயால் வான்முட்டும் அளவுக்கு கடும் புகை மூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது.
தகவலறிந்த வனத்துறையினர் நள்ளிரவு முதல் காட்டுத் தீயை தீத்தடுப்பு எல்லைகளை அமைத்தும், புதர்களை வெட்டி தடுப்புகளை அமைத்தும் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வனப்பகுதிகளில் எரியும் காட்டுத் தீயால், அரிய வகை மரங்கள், செடி, கொடிகள் மற்றும் பூச்சி இனங்கள், ஊர்வன ஆகியவை அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.