மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் 61-ஆவது மலர்க் கண்காட்சி மற்றும் கோடை விழா இன்று தொடங்குகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்காவில் இன்று (17.5.2024) முதல் 26ஆம் தேதி வரை பத்து நாட்கள் நடைபெறுகிறது. இவ்விழாவை மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தொடங்கி வைக்கிறார்.
இங்கு தோட்டக்கலைத்துறை மூலமாக மலர்க்கண்காட்சியும், சுற்றுலாத்துறை மூலமாக கோடை விழாவும் நடத்தப்பட உள்ளது. இவ்விழாவில் 10 நாட்களும் பல்வேறு பாரம்பரிய மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், பாரம்பரிய வீர விளையாட்டுகள், படகு அலங்கார அணி வகுப்பு, மீன் பிடித்தல் போட்டி, நாய்கள் கண்காட்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
இந்த நிலையில், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர்க் கண்காட்சி நுழைவுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சிறியவர்களுக்கான நுழைவுக் கட்டணம் ரூ.15ல் இருந்து ரூ.35 ஆகவும் பெரியவர்களுக்கு ரூ.75 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இக்கட்டணம் 26ஆம் தேதி வரை 10 நாட்கள் மட்டும் அமலில் இருக்கும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக கட்டணம் வசூலிப்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியாகியுள்ளனர்.