
சிவகாசியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
ஒரு குற்றச்சாட்டை சொன்னபிறகு, பதவி விலக வேண்டும் என்று சொல்வது காலம் காலமாக சொல்லப்பட்டு வருவதுதான். அவர்களுக்குத் தலைவலி வந்தால் எப்படி மருந்து தேய்த்துக்கொள்வார்களோ, அதுபோலத்தான் மற்றவர்களும், தலைவலி வந்தால், எப்போது மருந்து போடவேண்டுமோ, அப்போது மருந்து போடுவார்கள். அவர்களுக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு ஒரு நீதி என்று அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பேசுகிறார்கள். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மிகவும் துணிச்சலானவர். அவரைச் சோர்வடையச் செய்வதற்காக இதுபோன்ற சொல் அம்புகளை வீசுகிறார்கள். முதல்வர், துணை முதல்வர் அறிவுரை பெற்று, இந்தப் புகாரை சட்ட ரீதியாக அவர் எதிர்கொள்வார்.
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே, தான் முதல்வராக வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் நினைத்தது உண்மையாக இருக்கலாம். உண்மையும் ஆதாரமும் இல்லாமல் ஓ.பி.எஸ். எதையும் சொல்ல மாட்டார். தன்னை முன்னிலைப்படுத்தும் நிலைப்பாட்டைத் தவிர மக்கள் நலன் சார்ந்த நிலைப்பாட்டை டி.டி.வி. தினகரன் எடுக்கவில்லை என்ற கண்ணோட்டத்திலேயே மக்கள் அவரைப் பார்க்கிறார்கள். ஆர்.கே.நகரில் நாங்கள் சுட்டு வைத்த வடையை அவர் எடுத்துக்கொண்டு போய்விட்டார். அவர் இன்னும் வடை சுடவே இல்லை. அவர் சுடட்டும்; அப்புறம் பார்க்கலாம். தேர்தலின்போது எல்லோரும் வீரவசனம் பேசுவார்கள். மக்களின் அங்கீகாரத்தைப் பெறமுடியவில்லை என்றால், துண்டைக் காணோம்; துணியைக் காணோம் என்று போய்விடுவார்கள்.
இளவரசராக இருந்து தற்போது மன்னராக மகுடம் சூட்டப்பட்டிருக்கும் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான் எங்களுக்கு எதிரி. அவருக்கு அடுத்து குட்டி எதிரி யாரென்று சொன்னால், உதிரியாக எங்களிடமிருந்து பிரிந்து சென்றிருக்கக்கூடிய டிடிவி தினகரன்தான் இரண்டாவது வில்லன். அதனால், நாட்டில் இருக்கக்கூடிய வில்லனையும், வீட்டில் இருக்கக்கூடிய வில்லனையும் கழகத் தொண்டர்கள் எச்சரிக்கையாக அணுகுகிறார்கள்.
மக்களின் நாடித்துடிப்பை அறிந்து நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டும். நாடி ஜோசியத்தை பார்த்துவிட்டு வரக்கூடாது. இவ்வாறு பேட்டியளித்தார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.