Skip to main content

பெங்களூருவில் இளம்பெண் கொலை; கணவர் வீட்டில் உடலை புதைத்த உறவினர்கள்!

Published on 15/04/2023 | Edited on 15/04/2023

 

kanniyakumar palliyaadi young women incioednt held at bengaluru 

 

கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி பகுதியைச் சேர்ந்த ஜான்சன் என்பவருடைய மகள் ஜெனிலா சோபி (வயது 23). இவருக்கும் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் திப்பிரமலை பகுதியைச் சேர்ந்த சேம் மரியதாஸ் என்பவருக்கும் கடந்த சில  மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சேம் மரியதாஸ் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில் தனது திருமணத்திற்கு பிறகு ஜெனிலா சோபி பெங்களூருவில் உள்ள கணவர் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார்.

 

இந்நிலையில் சேம் மரியதாஸ்க்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் இடையே இது தொடர்பாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 11 ஆம் தேதி இரவு ஜெனிலா சோபி வழக்கம் போல் தூங்கிக் கொண்டிருந்த போது, சேம் மரியதாஸ் அவரை கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் கர்நாடக மாநில போலீசார் வழக்குப் பதிவு செய்து சேம் மரியதாஸை கைது செய்தனர். பின்னர் ஜெனிலா சோபியின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

பெங்களுருவில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் நேற்று சொந்த ஊரான கன்னியாகுமரி கொண்டுவரப்பட்ட நிலையில், ஜெனிலா சோபியின் உடல் அவரது பெற்றோர் வீட்டில் புதைக்காமல் கணவரின் வீட்டின் முன் பகுதியில் அடக்கம் செய்ய அவரது உறவினர்கள் முடிவு செய்து, இதற்காக அவரது வீடு அமைந்துள்ள கருங்கல் திப்பிரமலை பகுதிக்கு உடலை கொண்டு சென்றனர். இதனைத் தொடர்ந்து ஜெனிலா சோபி உடல் கணவர் வீட்டில் உள்ள வளாகத்தில் வாசல் முன்பு அடக்கம் செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக எவ்வித அசம்பாவித சம்பவமும் ஏற்படாமல் இருப்பதற்காக போலீசாரும் குவிக்கப்பட்டனர். பெங்களூருவில் கணவனால் கொலை செய்யப்பட்ட இளம்பெண் ஒருவரின் உடலானது சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு கொண்டு வந்து கணவரின் இல்லத்தில் அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்