தன்னுடைய கட்சி அறிவிப்பினை வெளியிட ராமநாதபுர மாவட்ட மண்ணைத் தொட்டவர், வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அதே ராம நாதபுர மாவட்ட மண்ணைத் தொட வந்துள்ளார். இந்த முறை தனது குடும்பவிழா என அறிவித்தாலும் அவர் துவங்கவிருப்பது ஆப்ரேஷன் 500 என்கின்றனர் கட்சி நிர்வாகிகள்.
ராமநாதபுரம் மாவட்டத்தினை பூர்வீகமாகக் கொண்ட நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சித்தலைவருமான கமலஹாசன் தன்னுடைய பிறந்தநாளில், பரமக்குடி தாலுகாவிற்குட்பட்ட கமுதக்குடி ஓல்டு இந்தியா மெட்ரிகுலேஷன் பள்ளியில் தந்தையார் சிலை திறப்புவிழா, திறன்மேம்பாட்டு மையம் திறப்பு மற்றும் நிர்வாகிகளுடன் கலந்துரையாடலை நிகழ்த்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. பொது இடமாக இல்லாது தனியாருக்கு சொந்தமான பள்ளியில் விழா? என்ற கேள்வி எழ, " பொது வெளியில் நிகழ்ச்சி நடத்தினால் அரசியல் செய்வார்கள். அதனால் தான் இங்கு நடத்துவதாக திட்டம். இருப்பினும், அந்த பள்ளி தற்போது கைவிடப்பட்ட பள்ளி. அது ராமநாதபுரம் பயனீர் மருத்துவமனைக்கு சொந்தமானது. முன்பு சாலையோர மோட்டலாக இருந்தது இப்பொழுது எங்கள் வசம் வந்துள்ளது.." என விளக்கம் கொடுத்தார் கட்சியின் நிர்வாகி ஒருவர்.
3 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள நிகழ்விடத்தில் சுமார் 2000 நபர்கள் அமரக்கூடிய அளவில் பந்தலும், 50* 20 அடி நீள அகலத்திலும் தெற்கு முகத்தில் மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. அதனருகில் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மைய வளாகம். இருபுறமும் குலைத்தள்ளிய வாழைத் தோரணங்களுடன் கரகாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம் என கமலஹாசனை வரவேற்கவுள்ளனர்.
பரமக்குடியை சேர்ந்த மாநில நிர்வாகியோ, "பரமக்குடியில் இந்தவிழாவினை நடத்துவது என கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மாநிலத் துணைத்தலைவர் மகேந்திரன் தலைமையில் ராமநாதபுரம் தாஜ்மகாலில் நடைப்பெற்ற கூட்டத்திலேயே முடிவு செய்யப்பட்ட ஒன்று. அத்துடன் இல்லாமல் இன்று ஆப்ரேஷன் 500 எனும் திட்டத்தினை தலைவர் அறிவிப்பார். அதாவது இன்றிலிருந்து 500 நாட்களுக்குள் கிராம் கிராமமாக சென்று கட்சிக்கென தனிக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இப்பொழுது நகர்புறத்தில் மட்டுமே வாக்கு வங்கி இருப்பதனால் கிராம வாக்குகளும் தங்களை அடையவேண்டுமென்பது இலக்கு. இதன் பின்னணியில் பிரசாந்த் கிஷோர் இருப்பது தெரியாதா என்ன?" என்கிறார் அவர்.