முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. அதாவது தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டதாகப் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தப் புகார் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டு இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதன்படி பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் பிரஜ்வால் ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை புகாரை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இத்தகைய சூழலில் ஆபாச வீடியோக்கள் தொடர்பான புகாரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது சிறப்பு தணிக்கை குழு புதியதாக வழக்கைப் பதிவு செய்தது. அதோடு ஹொலேநரசிபுராவில் உள்ள வீட்டிலேயே தன்னை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை செய்ததாக மதச் சார்பற்ற ஜனதாதள கட்சியின் பெண் கவுன்சிலர் புகார் அளித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் முன்பு ஆஜராகி பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமைக்கான சட்டப்பிரிவும் எஃப்.ஐ.ஆரில் கூடுதலாக சேர்க்கப்பட்டது. தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு தப்பிச் சென்றுள்ள நிலையில் அவருக்கு எதிராக விமான நிலையங்களுக்கு 2 வது லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. வெளிநாடு தப்பிச் சென்றுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய சிபிஐ ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்க வேண்டும் எனக் கார்நாடக மாநில சிறப்பு புலானாய்வுக் குழு (S.I.T) கோரிக்கை வைத்திருந்த நிலையில், ப்ளூ கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டது. அதன்படி, பிரஜ்வல் ரேவண்ணாவை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதற்கிடையில் பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தையும், தேவகவுடாவின் மகனும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. எச்.டி.ரேவண்ணா வீட்டில் பணியாற்றும் சமையலர் அளித்த புகாரின் பேரில் ரேவண்ணா மீது பாலியல் சீண்டல், மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஹோலேநர்சிபூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து எச்.டி.ரேவண்ணா அதிரடியாக கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து முதல் முறையாக முன்னாள் பிரதமர் தேவகவுடா கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தேவகவுடா கர்நாடகாவில் இன்று (18-05-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “எச்.டி.ரேவண்ணா தொடர்பாக நீதிமன்றத்தில் நடக்கும் விஷயங்கள் குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு சென்றுள்ளார். இது குறித்து, குமாரசாமி எங்கள் குடும்பத்தின் சார்பில், நாட்டின் சட்டப்படி நடவடிக்கை எடுப்பது அரசின் கடமை என்று கூறியுள்ளார்.
இந்த பாலியல் துஷ்பிரயோக வழக்குகளில் பல பேர் தொடர்பில் இருக்கிறார்கள். யாருடைய பெயரையும் நான் குறிப்பிட விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதியும் இழப்பீடும் கிடைக்க வேண்டும் என்றும் குமாரசாமி கூறியுள்ளார். பிரஜ்வல் மீது நடவடிக்கை எடுப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், எச்.டி.ரேவண்ணா மீதான குற்றச்சாட்டுகள், எப்படி வழக்கு உருவாக்கப்பட்டது என்பது குறித்த உண்மைகள் மக்களுக்கு தெரிய வந்துள்ளன. ஒரு வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது, மற்றொரு வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை” என்று கூறினார்.