Skip to main content

தாய் மற்றும் குழந்தைகள் கொலை; போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!

Published on 22/04/2023 | Edited on 22/04/2023

 

kallakurichi ulundurpet nearest land acquiring related incident 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்தநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மகள் வளர்மதி (வயது 37). இவர் அதே பகுதியைச் சேர்ந்த முருகவேல் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். குடும்ப பிரச்சனை காரணமாக முதல் கணவரை பிரிந்து சென்னையைச் சேர்ந்த செல்வம் என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் செல்வமும் அந்த பெண் குழந்தையும் விபத்தில் இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வளர்மதி சென்னையைச் சேர்ந்த குப்புசாமி என்பவரை 3வதாக திருமணம் செய்து கொண்டார். குப்புசாமிக்கும் வளர்மதிக்கு ஆண் குழந்தை பிறந்தது (தற்போது வளர்மதியுடன் சேர்த்து கொலை செய்யப்பட்ட மகன் தமிழரசன் வயது 11). இந்த நிலையில் குப்புசாமியுடன் கருத்து வேறுபாடு காரணமாக அவரையும் விட்டு பிரிந்து வளர்மதி சொந்த ஊருக்கு வந்துவிட்டார்.

 

அதன் பிறகு இவருக்கும் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள ஆலடி பாலக்கொல்லை பகுதியைச் சேர்ந்த திருமணமான மணிகண்டன் என்பவருடன் இடையில் பழக்கம் ஏற்பட்டு அவரை 4வது கணவராக திருமணம் செய்து கொண்டார் வளர்மதி. குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக சம்பாதிக்க வேண்டி இவர்கள் இருவரும் கள்ளக்குறிச்சி ஏமப்பேர் நரிமேடு பகுதியில் சொந்தமாக ஒரு வீடு கட்டி வசித்து வந்தனர். இதற்கிடையே வளர்மதி கருவுற்றார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது, கடந்த 10 மாதங்களுக்கு முன்பு நான்காவது கணவர் மணிகண்டன் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவர் இறந்த 2-வது மாதத்தில் வளர்மதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தான் கடந்த 19-ந் தேதி வளர்மதி அவரது மகன் தமிழரசன், 8 மாத கைக்குழந்தை கேசவன் ஆகியோர் வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இந்த கொலை சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளைப் பிடிப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் அவர்கள் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பாலசுப்பிரமணியன், திருமேனி ஆகியோர் உட்பட 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தினர். தனிப்படை போலீசாரின் விசாரணையில் சொத்துக்காக வளர்மதியின் உறவினரே திட்டமிட்டு வளர்மதி மற்றும் குழந்தைகளை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

 

போலீசார் நடத்திய விசாரணையில், "வளர்மதியின் தந்தை ரங்கநாதனுக்கு 4 மனைவிகள். இதில் 2-வது மனைவி அஞ்சலை என்பவரது மகள் வளர்மதி ஆவார். இந்நிலையில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சியில், வளர்மதி தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டுவதற்கு முடிவு செய்து தனது உறவினர் செங்குறிச்சியைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி விமலா என்கிற அஞ்சலையிடம் (வயது 50) 22 லட்சம் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. அந்த பணத்தில் செங்குறிச்சி பகுதியில் புதிய வீட்டை கட்டி முடித்தார். தான் கடனாக வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்கும் வரை அந்த வீட்டில் அஞ்சலையை குடியிருக்குமாறும் கடன் கொடுத்த பிறகு வீட்டை காலி செய்யுமாறும் கூறியுள்ளார். வளர்மதி கூறியபடி அவரால் அந்த பணத்தை திருப்பித் தர இயலவில்லை.

 

இந்த நிலையில் பணத்தை திரும்பத் தருமாறு விமலா வளர்மதியிடம் சென்று அடிக்கடி கேட்டுள்ளார். மேலும் கடன் கொடுக்க முடியவில்லை என்றால் அந்த வீட்டை தன்னிடமே விலைக்கு கொடுக்குமாறு விமலா கேட்டுள்ளார். அந்த இடத்தில் சென்ட் ஐந்து லட்ச ரூபாய் விலை போகிறது. எனவே மூன்று சென்ட் இடம் மற்றும் வீடு மொத்தத்தையும் 60 லட்சம் ரூபாய்க்கு விலை பேசி அதில் கடன் 22 லட்சம் போக மீதி பணத்தை தருமாறு வளர்மதி கூறியுள்ளார். ஆனால் விமலா நிலத்தின் மீதான விலையை மிகவும் குறைவாக கேட்டுள்ளார். அப்படி குறைந்த விலைக்கு  தருவதற்கு வளர்மதி மறுத்துவிட்டார்.

 

அதன் பின்னர் வளர்மதி விமலாவிடம் வாங்கிய கடன் தொகையை திருப்பித் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.  வளர்மதியிடம், அடிக்கடி சென்ற விமலா தனக்கு தரவேண்டிய பணத்தை தருமாறு வற்புறுத்தி கேட்டுள்ளார். அதற்கு வளர்மதி, நீங்கள் பணம் கொடுத்ததற்கு என்ன ஆதாரம் உள்ளது. பணம் தர முடியாது என்று கூறியதாகவும் இதனால் ஆத்திரமடைந்த விமலா, வளர்மதி மற்றும் அவருடைய 2 குழந்தைகளையும் கொலை செய்து விட்டால், அந்த இடம் மற்றும் வீடு தனக்கு சொந்தமாகிவிடும். தான் கொடுத்த கடனும் திரும்ப கிடைத்து விடும் என முடிவு செய்தார்.

 

இதற்காக அவர் ரிஷிவந்தியம் அருகே உள்ள பாசார் கிராமத்தைச் சேர்ந்த தனது உறவினர் சுப்பிரமணியனின் மகன்கள் தமிழ்ச்செல்வன் (வயது 27), பூபாலன் (வயது 30) ஆகியோரை தொடர்புகொண்டு அவர்களிடம் வளர்மதியை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி கடந்த 17-ந் தேதி இரவு 9 மணியளவில் விமலா மற்றும் பூபாலன், தமிழ்ச்செல்வன், அவரது நண்பர் நாகை மாவட்டம் கடலங்குடியைச் சேர்ந்த நாகராஜன் மகன் ராமு (வயது 24), சின்னப்பன் மகன் சிவா (வயது 39) ஆகியோர் கூலிப்படையாக செயல்பட்டு வளர்மதியின் வீட்டுக்குச் சென்றனர்.

 

வளர்மதியின் வீட்டின் அருகே பூபாலன், சிவா ஆகியோர் நின்று கொண்டு யாராவது வருகிறார்களா என்று நோட்டமிட்டனர்.  விமலா, வளர்மதி வீட்டுக் கதவைத் தட்டினார். வளர்மதி கதவைத் திறந்ததும், உள்ளே சென்ற விமலா நலம் விசாரிப்பது போல் சிறிது நேரம் பேசிவிட்டு வெளியில் வந்து சைகை காட்டினார். உடனே தமிழ்செல்வனும், ராமுவும் வீட்டுக்குள் செல்லவும், அஞ்சலை வெளியில் வந்து கதவின் வெளிப்பக்கம் தாழ்ப்பாளை போட்டுவிட்டார். பின்னர் தமிழ்செல்வன் மற்றும் ராமு ஆகியோர் சேர்ந்து வளர்மதியை தாங்கள் கொண்டு வந்திருந்த கத்தியால் வயிற்றில் குத்தி கழுத்தை அறுத்துள்ளனர்.

 

அப்போது தூங்கிக் கொண்டிருந்த தமிழரசன் எழுந்து சத்தம் போட்டதும் அவனையும், 8 மாத கைக்குழந்தையையும் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளனர். பின்னர் தடயத்தை மறைப்பதற்காகவும் போலீஸ் மோப்ப நாய் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதற்காகவும் மிளகாய்ப் பொடியை தூவி விட்டு தப்பிச் சென்று விட்டனர். இதையடுத்து விமலா, தமிழ்ச்செல்வன், ராமு, பூபாலன், சிவா ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் அப்பகுதியில் சம்பவத்தன்று இயங்கிய செல்போன் எண்களை கண்டறிந்து அதன் மூலம் அவர்கள் யார் யாரிடம் தொடர்பு கொண்டார்கள் என்ற ஆய்வின் அடிப்படையில் செங்குறிச்சி டோல்கேட் பகுதியில் பலாப்பழம் விற்பனை செய்து வந்த விமலா, சம்பவத்திற்கு பிறகு வியாபாரம் செய்ய வரவில்லை என்பது தெரியவந்தது.

 

உடனே போலீசார் விமலாவை கள்ளக்குறிச்சி காவல் நிலையம் அழைத்து வந்து முறைப்படி விசாரணை செய்து இச்சம்பவங்கள் அனைத்தும் தனது தலைமையில் நடைபெற்றது என ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரையும் சம்பவம் நடந்த வீட்டிற்கு அழைத்துச் சென்று எப்படி கொலை செய்தார்கள் என்பதை விளக்க வைத்து அதை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். கொலை நடந்த 24 மணி நேரத்தில் கொலையாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட கண்காணிப்பாளர் மோகன்ராஜ் பாராட்டியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்