சொத்துக்காக சொந்த அண்ணனையே கடத்திய தங்கையின் செயல் திருப்பூர் மக்களிடையே பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதிக்கு அருகே உள்ள தெக்கலூரைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருக்கு சிவக்குமார் என்கிற மகனும், அம்பிகா என்ற மகளும் உள்ளனர். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த பொன்னுசாமிக்கு பல்லடம், பெருமாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏகப்பட்ட சொத்துக்கள் இருக்கிறது. சிவக்குமார் தன் மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இதனிடையே, பொன்னுசாமியின் மகள் அம்பிகா, வேலுச்சாமி என்பவரை திருமணம் செய்துகொண்டு அறிவொளி நகரில் வசித்து வந்துள்ளார்.
அம்பிகாவின் மகன் கோகுல் என்பவர் பாஜக கட்சியில் விவசாய அணி நகர தலைவராக இருந்து வருகிறார். இதையடுத்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொன்னுசாமி இறந்துவிட்ட நிலையில், அம்பிகாவுக்கும் அவரது அண்ணன் சிவக்குமாருக்கும் சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் தன்னுடைய தந்தை பொன்னுசாமியின் சொத்துக்கள் அனைத்தும் சிவக்குமார் பெயருக்கு மாற்றப்பட்டது.
இதை பொறுக்க முடியாத அம்பிகா குடும்பத்தினர், பெற்றோர்களின் சொத்துக்களை தங்களுக்கு எழுதிக் கொடுக்கச் சொல்லி சிவக்குமாரிடம் அடிக்கடி பிரச்சனை செய்து வந்துள்ளனர். அந்த சமயத்தில் கடந்த 25 ஆம் தேதியன்று, சிவக்குமார் சேடபாளையத்தில் உள்ள தனது நண்பர் வடிவேல் என்பவரின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சிவக்குமாரை பின்தொடர்ந்து வந்த அம்பிகா மற்றும் அவரது கணவர் வேலுச்சாமி மற்றும் சிலர், சிவக்குமாரை மாருதி காரில் வைத்து கடத்திச் சென்றுள்ளனர். பல்லடத்தில் அம்பிகாவுக்குச் சொந்தமான வீட்டில், சிவக்குமாரை அடைத்து வைத்து காலில் கயிற்றைக் கட்டி தலைகீழாகத் தொங்கவிட்டு கையாலும், கட்டையாலும் அடித்ததாகக் கூறப்படுகிறது. அதில் வலி தாங்க முடியாத சிவகுமார், நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்குறேன்.. என்ன விட்ருங்க என கெஞ்சி கதறியுள்ளார். அதைத் தொடர்ந்து, 21 ஸ்டாம்ப் பேப்பரில் சிவக்குமாரிடம் சொத்து பத்திரங்களில் கையெழுத்து பெற்றுக்கொண்டனர்.
அதுபோதாதென்று, அவரிடம் இருந்த நகை பணங்களை பிடுங்கிக்கொண்டு பெங்களூரில் உள்ள மனநல காப்பகத்தில் சேர்த்துள்ளனர். பின்னர், மயக்கம் தெளிந்த சிவக்குமார் அங்கிருந்தவர்களிடம் நடந்த சம்பவத்தைக் கூறி அவர்களின் உதவியுடன் மீண்டும் பல்லடத்துக்கு வந்துள்ளார். இதையடுத்து, அவரது நண்பர்களின் உதவியுடன், தன்னை கடத்திய அம்பிகா குடும்பத்தினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட பல்லடம் போலீசார் கோகுல், வேலுச்சாமி உள்ளிட்ட 5 பேரை கைது செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, தலைமறைவாக உள்ள சிவக்குமாரின் தங்கை அம்பிகாவை, போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். சொத்திற்காக தனது சொந்த அண்ணனையே கடத்தி சித்ரவதை செய்த சம்பவம் திருப்பூரை திருப்பிப் போட்டுள்ளது.