கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மோகன்ராஜ் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சப் பயன்படும் சாராய ஊறல்களை அழிப்பது, கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், கள்ளச்சாராயம் கடத்தல் மற்றும் விற்பனை செய்பவர்களை கைது செய்வது போன்ற அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்நிலையில், 07.03.2023 அன்று வரஞ்சரம் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் குணசேகர் தலைமையிலான தனிப்படை காவலர்கள் வேங்கைவாடி கிராமத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது அப்பகுதியில் உள்ள கரும்பு காட்டில் மறைத்து வைத்திருந்த கள்ளச்சாராயம் காய்ச்சப் பயன்படுத்தப்படும் புளித்த சாராய ஊறல் ஒரு 200 லிட்டர் பிளாஸ்டிக் பேரலில் கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்தனர்.
மேலும், இந்த சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள குற்றவாளியைப் பிடிக்க தனிப்படை காவலர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்புவார்கள். காவல்துறையினர் அவ்வப்போது மலைக்குச் சென்று அங்குள்ள சாராய ஊறல்களைக் கண்டறிந்து அழிப்பது, கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை கைது செய்வது எனத் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், தரைப்பகுதியில் உள்ள வரஞ்சரம் பகுதியில் கரும்பு காட்டில் சாராயம் காய்ச்சும் தொழிலைத் துவங்கியுள்ள சம்பவம் காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.