கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சரியான போக்குவரத்து வசதி இல்லாத மலை கிராமங்களில் அடர்ந்த வனப்பகுதிகள் ஏராளம் உள்ளன. இந்த வனப்பகுதியில் காட்டு விலங்குகள் நிறைய உள்ளன.
இந்த மலையில் உள்ள மேல்பாச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட கிணத்தூர் என்ற குக்கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் கோவிந்தன் (வயது 40). விவசாயியான இவர் நேற்று முன்தினம் மாலை தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென எதிர்பாராத நிலையில் அங்கு வந்த கரடி ஒன்று கோவிந்தனை தாக்கியுள்ளது. இதனால் அவர் கத்தி கூச்சலிட்டுள்ளார். அப்போது அக்கம் பக்கத்தினர் அவரது கூச்சலை கேட்டு அங்கு வந்துள்ளனர். இதையடுத்து கரடி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
படுகாயம் அடைந்த கோவிந்தனை கிராம மக்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். கோவிந்தன் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விவசாயியை கரடி தாக்கிய இச்சம்பவம் மலை கிராம மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.