கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகில் உள்ளது சின்ன மாம்பட்டு. இந்தப் பகுதியைச் சேர்ந்த கொழுந்தான் என்பவரது மகன் வெங்கடேசன் வயது 36. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிச்சைக்காரன் மகன் அருணாச்சலம் என்பவருக்கும் வீட்டுமனை சம்மந்தமாக நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. பிரச்சனைக்குரிய இடம் தனது மூதாதையர்கள் பெயர்களில் உள்ள அந்த இடம் சம்பந்தமான ஆவணங்களின் நகல்களை கேட்டு கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் வெங்கடேசன் பலமுறை மனு கொடுத்துள்ளார்.
மேலும், நேரில் சென்றும் முறையிட்டுள்ளார். ஆனால், வட்டாட்சியர் அலுவலர்கள் அவர் கேட்ட ஆவணங்களைக் கொடுக்க மறுத்து வந்துள்ளனர். இதனால் தனக்கு சேரவேண்டிய வீட்டு மனை கிடைக்காமல் போய்விடுமோ என்ற விரக்தியில் இருந்துவந்த வெங்கடேசன், நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் திடீரென்று மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனுடன் நுழைந்தார்.
உடனே பையில் மறைத்து கொண்டுவந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து மண்ணெண்ணெய் கேனை பிடுங்கிக் கொண்டனர். வெங்கடேசனின் தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினர். தற்கொலைக்கு முயன்ற வெங்கடேசனை போலீசார் கைது செய்து கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணையில் மேற்படி தகவல்களை வெங்கடேசன் கூறியுள்ளார். வருவாய்த்துறையினர் தனக்கு சேர வேண்டிய ஆவணங்களை தராததால் தாம் தீக்குளிக்க முடிவு எடுத்ததாக வெங்கடேசன் கூறியுள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.