சுங்கச்சாவடிகளில் அவசர வாகனங்களுக்கான தனி வழியில் நீதிபதிகள், முக்கிய பிரமுகர்களின் வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகத்தில் உள்ள சுங்கச்சவாடிகளில் அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் நிலுவை சுங்க கட்டணம் செலுத்துவது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் ஹுலுவாடி ஜி.ரமேஷ், எம்.வி.முரளிதரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், சுங்கச்சாவடிகளில் நீதிபதிகளின் வாகனங்கள் செல்லும்போது உரிய வழி இல்லை என்றும், வாகனங்களில் நீதிபதிகளுக்கான சின்னம் இருந்தும், ஓட்டுநர் அடையாள அட்டை காண்பித்தாலும் சுங்கச்சாவடி ஊழியர்கள் தரக்குறைவாக நடப்பதாக கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், சுங்கச்சாவடிகளில் அவசர வாகனங்கள் செல்லும் வழிகளில், நீதிபதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த அவசர வாகன வழிகளில் நீதிபதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வாகனங்களை அனுமதிக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் நெடுஞ்சாலை ஆணையத்துக்கு எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள், விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.