தேர்தல் ஆணையத்தில் உத்தரவில் பறக்கும் படைகளின் சோதனைகளை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த வீடியோ கிராபர் வாகனம் மோதி விபத்தில் மரணம் அடைந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா பாண்டிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமநாதன் மகன் ராஜ்கமல் (எ) ராமையா. (வயது 48). புளிச்சங்காடு கைகாட்டியில் ஸ்டூடியோ வைத்துள்ளார். அரசு விழாக்களில் அதிகமாக படங்கள் மற்றும் வீடியோ எடுப்பவர்.

தற்போது தேர்தல் பணிக்காக தனியார் ஸ்டுடியோக்களைச் சேர்ந்த வீடியோ கிராபர்களை ஒப்பந்த அடிப்படையில் தேர்தல் ஆணையம் அழைத்து பணியில் ஈடுபடுத்தி உள்ளனர். அந்த வகையில் ராஜ்கமல் தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதியில் பேராவூரணிப் பகுதியில் உள்ள பறக்கும் படையில் வீடியோ எடுத்து வந்தார்.
3 நாட்களுக்கு முன்பு பேராவூரணி அருகில் உள்ள சித்தாதிக்காடு கிராமத்தில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அதை ராஜ்கமல் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த போது அந்த வழியாக சென்ற ஒரு மோட்டார் சைக்கிளில் பறக்கும் படையினருக்கு பயந்து வேகமாக செல்ல முயன்ற போது ராஜ்கமல் மீது மோதியுள்ளது. அந்த விபத்தில் அவர் படுகாயமடைந்து புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். ஆனால் இன்று சிகிச்சை பலனின்றி ராஜ்கமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சக வீடியோ கிராபர்கள் கூறும் போது.. தேர்தல் பணிக்காக பறக்கும் படையில் எங்களை நியமனம் செய்கிறார்கள். போகும் இடங்களில் வேகமாக வரும் வாகனங்களை சாலையில் நின்று போலிசார் மறிப்பதால் நிலை தடுமாறி ஓரமாக நிற்கும் எங்கள் மீது மோதுகிறது. அதனால் உயிரிழப்பு எங்களுக்கு தான் ஏற்படுகிறது. குறைந்த தொகைக்கு தான் வேலை செய்கிறோம்.
இந்த ஆண்டின் முதல் பலி ராஜ்கமல். அவர் குடும்பத்திற்கு தேர்தல் ஆணையம் தக்க இழப்பீடு வழங்க வேண்டும். எப்போதும் போல விபத்திற்கு கிடைக்கும் நிவாரணத்தைவிட கூடுதலாக இழப்பீடு வழங்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.