Skip to main content

ஜல்லிக்கட்டு போட்டி; பார்வையை இழந்த இளைஞர்

Published on 18/01/2023 | Edited on 18/01/2023

 

jallikattu held in karur district kulithalai 

 

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஆர்.டி.மலை என்கிற இராட்சண்டார் திருமலையில் 61-வது ஆண்டு ஜல்லிக்கட்டு விழா நேற்று (17.01.2023) நடைபெற்றது. போட்டியை கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து முதலில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த கோவில் காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. போட்டியில் பங்குபெற்ற மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

 

ஜல்லிக்கட்டு போட்டியில் 756 காளைகள் பங்குபெற்றன. இவற்றை அடக்க 362 காளையர்கள் களம் கண்டார்கள். போட்டியானது 5 சுற்றுகளாக நடைபெற்றது. போட்டியில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் சென்ற காளைகளுக்கும் சில்வர் பாத்திரங்கள், கட்டில், சைக்கிள், சேர் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. களத்தில் 59 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர். இதில் 11 வீரர்கள் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். களத்தில் சிவக்குமார் (வயது 21) என்பவரது கண்ணில் மாடு குத்தியதில் அவரது விழித்திரை கிழிந்து களத்திலேயே அவருக்கு பார்வை பறிபோனது.

 

இந்தப் போட்டியில் நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் 21 காளைகளை அடக்கி முதல் இடத்தைப் பெற்றார். இவருக்கு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நாட்டு மாட்டு காளை ஒன்றை பரிசாக வழங்கினார். மேலும், இவருக்கு விழாக்குழு சார்பில் வாஷிங் மெஷின் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது. 7 காளைகளை அடக்கி இரண்டாவது இடம்பிடித்த திருச்சி சாந்தாபுரத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பவருக்கு விழாக்குழு சார்பில் சோபா பரிசளிக்கப்பட்டது. சிறந்த காளைக்கான பரிசு முதலைப்பட்டி கிராமம் கீரிக்கல்மேட்டைச் சேர்ந்த பால்காரர் செல்வம் என்பவரின் காளைக்கு ரூபாய் 10 ஆயிரம் ரொக்கமாக 6 பேர் கொண்ட நீதிமன்றக் குழுவினரால் வழங்கப்பட்டது.

 

விழாவில் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், தோகைமலை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் அண்ணாதுரை, திமுக கவுன்சிலர் சின்னையன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். போட்டி நடக்கும் இடத்தை திருச்சி டிஐஜி மற்றும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர். ஜல்லிக்கட்டு போட்டியைக் காண சுமார் 50,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டனர். ஜல்லிக்கட்டு போட்டியானது மாலை 5 மணிக்கு நிறைவுபெற்றது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விராலிமலையில் ஜல்லிக்கட்டு; விஜயபாஸ்கர் தலைமையில் நடப்பட்ட முகூர்த்தக்கால்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Muhurthakaal planting program for jallikattu competition at Viralimalai

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் உள்ளது. இங்கு வருடந்தோறும் சித்திரை மாத திருவிழாவானது வெகு விமரிசையாக நடைபெறும். அதனையொட்டி ஜல்லிக்கட்டு போட்டியானது திருவிழாவிற்கு முன்பு நடைபெறும் பூச்சொரிதல் விழா அன்று வெகு விமர்சியாக நடைபெறும். ஆனால் இந்தமுறை தேர்தல் விதிமுறைகளின் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி இல்லாமல் இருந்தது. அதனால் ஜல்லிக்கட்டு போட்டியின்றி  பூச்சொரிதல் விழா மட்டும் நடைபெற்றது.

தற்போது தேர்தல் முடிவடைந்ததையடுத்து ஜல்லிக்கட்டு கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உத்தரவு கிடைத்ததையடுத்து  வருகின்ற 30-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதனையடுத்து அதற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியானது முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது.

அதில் ஜல்லிக்கட்டு திடலில் உள்ள முகூர்த்தக் காலுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் செய்து நடப்பட்டது. இதில் விழா கமிட்டியினர், சர்வகட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பேரிகார்டு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கான அரசாணையை உடனடியாகப் பெற்றுத்தந்த விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு கமிட்டி நிர்வாகிகள், சர்வகட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.