கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பணம் குறித்து உரையாற்றிய பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.
கமல்ஹாசன் பேசியதாவது, ''என்னோட அனுபவத்தில் சொல்கிறேன். மூச்சு இல்லாமல் 40 செகண்ட் அல்லது ஒரு நிமிடம் தாங்குவோம். தண்ணி இல்லாமல் ஆறு ஏலு நாட்கள் தாங்குவோம். சாப்பாடு இல்லாமல் பத்து நாட்கள் தாங்குவோம். அதைவிட பணம் எப்படி முக்கியமாக இருக்க முடியும். இதையெல்லாம் வாங்குவதற்கு அது ஒரு கருவி. ஆண்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் தாடி வைக்க வேண்டுமா அல்லது மழிக்க வேண்டுமா என்பது உங்களுடைய இஷ்டம். அதை நீங்கள் பிளேடு கிட்டப் போய் கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது. அதுவெறும் கருவி தான். அதுவா சொல்லும் வேணாம் தாடிய கொஞ்சம் நீளமாகவே வச்சுக்கோ அல்லது முழுவதும் சவரம் பண்ணிக்க, இல்ல மீசை மட்டும் வச்சுக்க என பிளேடுக்கு சொல்லத் தெரியாது. அவ்வளவுதான் பணமும். அது பேசாமடந்தை.
நான் சினிமா நடிக்க வந்த பொழுது இப்படி எல்லாம் நடிக்க முடியுமா என்று பலர் இருந்தனர். முக்கியமாக என் ஏரிக்கரையில் தெரிந்த முதல் சூரியன் சிவாஜி. அதன் பிறகு தான் இப்படி ஒரு கேலக்ஸி இருக்கிறது என்றே தெரியும். அதற்கு காரணம் எனக்கு கோனார் நோட்ஸ் கொடுத்து பொழிப்புரை சொல்லி அனுப்பி வைத்தவர் சிவாஜி சார் தான். நான் உங்களுக்குச் சொல்லிக் கொள்வதெல்லாம் இன்னொரு சிவாஜி ஆகவேண்டும் என நான் நினைக்கவே இல்லை. இன்னொரு சிவாஜி வருவாரா என்று கூட கேட்கவில்லை'' என்றார்.