கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தற்போது நெல் அறுவடை சீசன் முடிந்து விவசாயிகள் ஆங்காங்கே உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களுக்கு தங்கள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய கொண்டு சென்றுள்ளனர். அங்கு எடை போட்டு விற்பனைச் செய்வதற்கு காலதாமதம் ஆவதால் விவசாயிகள் தங்கள் நெல்லை ஆங்காங்கே குவியலாகக் கொட்டி வைத்து உள்ளனர்.
தற்போது பெய்து வரும் கோடைமழையில் நெல் நனைந்து வீணாகி வருகிறது. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். உதாரணமாக கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்திலும், அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேல் குமாரமங்கலம் பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களிலும், விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டுவந்த நெல் பல நாட்களாக எடை போட்டு விலைக்கு எடுத்துக் கொள்ளாமல் உள்ளது. இதனால், ஆங்காங்கே திறந்தவெளியில் குவிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. பெய்துவரும் மழையால் அந்த நெல் மூட்டைகள் முழுவதும் நனைந்து நாசமாகி வருகின்றன.
நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை மழையில் நனைய விடாமல் விரைவாகக் கொள்முதல் செய்யவேண்டும் என்று விவசாயிகள் வேதனையோடு தெரிவித்து வருகிறார்கள். விவசாயிகள் விளைவித்த நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் கடலூர் மேற்கு மாவட்ட திட்டக்குடி பகுதியில் உள்ள நிதித்தம், பெருமுளை, உட்பட பல்வேறு ஊர்களில் புதிய நெல் கொள்முதல் நிலையங்களைச் சமீபத்தில் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் சி.வி. கணேசன் திறந்துவைத்தார். தமிழக அரசு விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டிருந்தாலும், அதிகாரிகள் அதிக அக்கறையுடன் விவசாயிகள் விளைய வைத்த நெல்லை கொள்முதல் நிலையங்களுக்கு வந்த உடன் உடனடியாக எடைபோட்டு அவர்களுக்கு உரிய பணத்தைக் கொடுத்து அனுப்ப வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.