சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பாக ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகர் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மோட்டார் வாகன சாலை வரியை ரத்து செய்ய வேண்டும், அக்ரிகேட்டர் விதிகளை உடனடியாக வகுத்திட வேண்டும், ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும், வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் காவல் துறையினர் வாங்கும் மாமூலை கட்டுப்படுத்த வேண்டும், 2019 வாகன சட்டத்தை கைவிட வேண்டும், இணையவழி சேவையை உடனடியாக தொடங்க வேண்டும், என்பது உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சாலை போக்குவரத்து சங்க மாவட்ட செயலாளர் சந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரங்கராஜன் கலந்துகொண்டு பேசினார். மாவட்ட பொருளாளர் சுரேஷ் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.