Commercial gas cylinder price rises by Rs 102.50

Advertisment

வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் விலை நடப்பு மே மாதத்தில் 102.50 ரூபாய் உயர்ந்துள்ளது. அதேநேரம், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ரஷ்யா & உக்ரைன் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. மேலும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் பெருமளவு சரிந்துள்ளது.ஏற்கனவே உள்நாட்டில் தேவை அதிகரிப்பு, உற்பத்தி திறன் குறைவு காரணமாக உணவகம், தேநீர் கடைகள் உள்ளிட்ட வணிக தளங்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட காஸ் சிலிண்டர் விலை கடந்த மாதமும் கணிசமாக உயர்ந்தது.

இந்நிலையில், நடப்பு மே மாதமும் அதன் விலை மேலும் 102.50 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இவ்வகை சிலிண்டர் விலை 2,253 ரூபாயாக இருந்த நிலையில், நடப்பு மாதத்தில் 2,355.50 ரூபாயாக அதிகரித்துள்ளது.

Advertisment

சேலத்தில் வணிக காஸ் சிலிண்டர் விலை நடப்பு மே மாதத்தில் 2,461.50 ரூபாயாக உள்ளது. சேலத்தில், கடந்த மாதம் 2,359- க்கு விற்பனை ஆனது. பெரும்பாலும் இவ்வகை சிலிண்டர் விலை 50, 75 ரூபாய் என்று உயர்ந்து வந்த நிலையில், ஒரே நேரத்தில் தடாலடியாக 100 ரூபாய்க்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது வணிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதன் மூலம் உணவகங்களில் உணவுப் பொருள்கள், தேநீர், பேக்கரி உணவுகள் உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலையும் கணிசமாக உயரும் அபாயம் உள்ளது.

அதேநேரம், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையும் மாதத்தின் முதல் நாள் மாற்றி அமைக்கப்பட்டு வந்த நிலையில், நடப்பு மே மாதத்தில் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

Advertisment

அதனால் இவ்வகை காஸ் சிலிண்டர் விலை சென்னையில் 965.50- க்கும், டெல்லி, மும்பையில் 949.50- க்கும், கொல்கத்தாவில் 976- க்கும், சேலத்தில் 983.50- க்கும் என கடந்த ஏப்ரல் மாத விலையிலேயே விற்பனை ஆகிறது. எனினும், மாதத்தின் நடுவிலும் இதன் விலையில் மாற்றம் நிகழக்கூடும் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.