திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஊதுபத்தி தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்துக்கு எரிகல் விழுந்ததே காரணம் என செய்திகள் பரவிய நிலையில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்துள்ள எத்துப்பட்டு பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு ஊதுபத்தி மட்டுமல்லாது கொசுவத்தி, சாம்பிராணி உள்ளிட்டவையும் தயாரிக்கப்படுகிறது. சாம்பிராணி, கொசுவத்தி தயாரிக்கப்படும் தொழிற்சாலையின் இரண்டாவது அலகில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விபத்து நிகழ்ந்தபோது சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு பயங்கர சத்தம் உணரப்பட்டதாகத் தகவல் வெளியானது.
இதே பகுதியில் கடந்த காலங்களில் எரிகல் விழுந்து இருவர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில் எரிகல் விழுந்ததால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. உடனடியாக தடயவியல் துறையைச் சேர்ந்த பாபுவின் தலைமையிலான குழுவினர் இன்று மதியம் ஆய்வு செய்து அந்த பகுதியிலிருந்து சந்தேகத்திற்குரிய வகையிலான கற்களைச் சேகரித்து ஆய்வுக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த விபத்தில் சுமார் 2 கோடி ரூபாய் மதிக்கத்தக்க பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.