விருதுநகர் மாவட்டம், பாலவநத்தத்தில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில், தன்னுடைய தாயாருக்கு முதியோர் உதவித்தொகை கேட்டு மனு அளிக்க வந்திருந்தார் கலாவதி. தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு தூரத்து உறவினரான கலாவதி மனு அளித்தபோது, ‘பரிசீலித்து நடவடிக்கை எடுப்போம்’ என கே.கே.எஸ்.எஸ்.ஆர். கூறியும், சொன்னதையே திரும்பத்திரும்பத் தெலுங்கில் சொன்னபடியே இருந்தார். உறவினர் என்ற வகையில் தன் வீட்டுக்கெல்லாம் வரும் கலாவதியின் இந்தச் செயல் கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு எரிச்சலூட்ட,‘அதான்.. பார்த்துப் பண்ணிருவோம்னு சொல்லுறேன்ல..’ என்று உரிமையுடன் அந்த மனுவாலேயே கலாவதியின் தலையில் தட்டினார்.
இந்தக் காட்சியை செல்போனில் பதிவுசெய்த யாரோ ஒருவர், ‘மனு அளிக்க வந்த பெண்ணை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். அடித்தார்’ என்று வலைத்தளத்தில் பரப்பி வைரலாக்கிவிட, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ‘மக்கள் என்ன உங்கள் அடிமைகளா?’ எனக் கேள்வி எழுப்பி ‘அடுத்த 48 மணி நேரத்திற்குள் அமைச்சர் பதவி விலகவேண்டும். அல்லது அவரது வீட்டை முற்றுகையிடுவோம்.’ என ட்விட்டரில் தெரிவித்தார்.
அந்தக் கால அரசியல்வாதியான கே.கே.எஸ்.எஸ்.ஆர்., எந்தக் கூட்டத்திலும் கட்சித் தொண்டரின் பெயரைச் சொல்லி அழைப்பது, தொண்டனோ, பொதுஜனமோ தோளில் கைபோட்டு பேசுவது, உரிமையுடன் செல்லமாகத் திட்டுவதையெல்லாம், தனக்கே உரிய பாணியில் தொடர்ந்து கடைப்பிடித்து, யாருடைய மனதிலும் எளிதாக இடம்பிடித்துவிடுவதை வழக்கமாகக் கொண்டவர். கலாவதி தூரத்து உறவினர் என்ற உரிமையில், தான் மனுவால் தலையில் தட்டியதைப்போய் அரசியலாக்குகிறார்களே என்று ஆதங்கப்பட்டார்.
கலாவதியும் மீடியாக்களிடம் “அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். எனக்கு அண்ணன் முறை. அவர் என்னை அடிக்கவில்லை. நான் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.” என்று அடித்ததாகக் கிளம்பிய விவகாரத்துக்கு விளக்கம் தந்து முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆனாலும், அறிவித்தபடி முற்றுகைப் போராட்டம் தொடரும் என பா.ஜ.க. வம்புக்கு நின்றது. விருதுநகர் ராமமூர்த்தி சாலையிலுள்ள அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். வீட்டு முன்பாக பா.ஜ.க.வினர் கூடுவார்கள் என்பதை அறிந்திருந்த காவல்துறை, நகரின் பல்வேறு பகுதிகளையும் கண்காணித்தது. ராமமூர்த்தி சாலையிலுள்ள பத்திரப்பதிவுத்துறை அலுவலகம் முன்பாக பாஜகவினர் திரண்டு அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயற்சித்தபோது, காவல்துறையினரோடு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களைக் கைதுசெய்த காவல்துறை, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளது.
எந்த ஒரு விவகாரத்தையும் அரசியலாக்கியே தீருவது என்ற பா.ஜ.க.வின் இந்த நிலைப்பாட்டால், விருதுநகரில் தற்காலிகமாக போக்குவரத்தை காவல்துறை மாற்றியமைக்க, பள்ளி மாணவர்களும் பொதுமக்களும் சிரமத்துக்கு ஆளானார்கள்.
சொல்லிக்கொள்ளும் அளவுக்கு யார் மீதும் எந்தத் தாக்குதலும் நடக்கவில்லை. சம்பந்தப்பட்டவரே, ‘அமைச்சர் எனக்கு அண்ணன் உறவுமுறை. அவர் எங்கே என்னை அடித்தார்?’ என்று விளக்கம் தந்தும், ‘அதெல்லாம் ஏற்கமுடியாது’ எனத் தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்ளப் போலியாக ஒரு போராட்டத்தை பா.ஜ.க.வினர் பட்டவர்த்தனமாக நடத்தியுள்ளனர்.