"மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் அவர்கள் கல்வி பயில்வதில் தடையேதும் இருக்கக்கூடாது. இப்போதுள்ள சூழ்நிலையில் அவர்களின் எதார்த்த நிலையைப் புரிந்து கொண்டு ஆளும் அரசு அறிவிப்புகளை வெளியிட வேண்டும்" என தமிழ் மாநில காங்கிரசின் இளைஞர் அணித் தலைவர் ஈரோடு யுவராஜா கூறியுள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலக நாடுகளைத் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பரவல், நமது இந்தியாவிலும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்துக் கல்வி நிலையங்களும் மூடப்பட்டுவிட்டன. மீண்டும் எப்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை இல்லை. அதேபோல கல்லூரி படிக்கும் மாணவர்களின் பருவத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இறுதி ஆண்டு பருவத் தேர்வுகள் மட்டும் நடத்தப்படும் என யு.ஜி.சி தெரிவித்ததை அடுத்து, செப்டம்பர் மாதத்துக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவையடுத்து, பல்வேறு பல்கலைக்கழகங்கள் இளங்கலை, முதுகலை இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் நடத்த ஆரம்பித்துள்ளன. கடந்த செப்டம்பர் 15 -ஆம் தேதி முதல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகள் தொடர்ந்து வழக்கம் போல, 3 மணி நேரம் ஆன்லைன் தேர்வாக நடைபெற்று வருகிறது. முதல் முறையாக ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடைபெறுவதால், இதில் கிராமப்புற மற்றும் மலைப் பகுதிகளில் வாழும் மாணவர்கள் அனைவருக்கும் போதிய இணையத்தள வசதி கிடையாது. அதற்கான வாய்ப்பும் அவர்களுக்கு இல்லை.
எனவே, அரசு இந்த உண்மை நிலையைப் புரிந்து கொண்டு உரிய முறையில் மாணவர்களுக்கு அவர்கள் இருக்கும் பகுதிகளில் உள்ள, பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதிய இணைய வசதிகளுடன் தேர்வுகள் எழுத அந்தந்த மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். மேலும், அனைத்துக் கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்கள் மூலம் தேர்வு எழுதும் மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணுக்கான அதிவேக இணையத்தள வசதியை, அரசு இலவசமாக வழங்கிட வேண்டும். இதற்கான உரிய நடவடிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு மேற்கொள்ள வேண்டுமென த.மா.கா இளைஞரணி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறியிருக்கிறார்.