
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இத்தகைய சூழலில் ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகில் நேற்று முன்தினம் (30.11.2024) மாலை 5 மணி அளவில் கரையைக் கடக்க துவங்கியது. நேற்று இரவு 10.30 மணிக்கும் 11.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் கரையைக் கடந்தது. இது புதுச்சேரிக்கு அருகில் நிலை கொண்டிருந்தது. இதனையடுத்து ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று (01.12.2024) காலை 11.30 மணியளவில் வலுவிழந்தது.
இருப்பினும் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதே சமயம் திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (02.12.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் வேலூர், சேலம், திருப்பத்தூர், தருமபுரி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. அதோடு மழை காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட உதகை, கூடலூர் வட்டத்திலுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. அதே போன்று நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் உமா பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள மற்றொரு வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “அடுத்த மூன்று மணி நேரத்தில் அதாவது இன்று (02.12.2024) காலை 10 மணிக்குள் தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.