Skip to main content

விஷ கழிவு நீர்... கொலைகாரர்களால் செத்து மிதக்கும் மீன்கள்...!

Published on 29/01/2020 | Edited on 29/01/2020

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே விவசாய தோட்டத்து பண்ணை குட்டையில் வளர்க்கப்பட்ட 3 ஆயிரம் மீன்குஞ்சுகள் திடீரென செத்து மிதந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

Industrial waste water issue

 



பவானிசாகர் அருகே உள்ள கொக்கரகுண்டி என்ற பகுதியை சேர்ந்தவர் விவசாயி கனகராஜ். இவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். அதே தோட்டத்தில் அரை ஏக்கர் பரப்பளவில் மீன் வளர்ப்பதற்காக பண்ணை குட்டை அமைத்து அதில் ரோகு, கட்லா, மிருகால் என மீன் வகைகளை சேர்ந்த 3 ஆயிரம் குஞ்சுகள் வாங்கி அந்த குட்டையில் விட்டு வளர்த்து வந்தார். குட்டையில் மீன்குஞ்சுகள் விடப்பட்டு மூன்று மாதங்கள் ஆன நிலையில் இன்று காலையில் அந்த குட்டையில் உயிருடன் இருந்த மீன்கள் எல்லாமே பரிதாபமாக  செத்து மிதந்தன.

இதைக்கண்ட அந்த விவசாயி கனகராஜ் பெரும் அதிர்ச்சியடைந்தார். இதற்கு காரணம் அந்தப்பகுதியில் செயல்பட்டு வரும் எட்டுக்கும் மேற்பட்ட காகித ஆலைகளின் விஷ கழிவு நீர் அப்படியே வெளியேற்றப்படுவதால்   விவசாய தோட்டங்களில் உள்ள கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் அந்த கழிவுநீர் கலந்து நீர் விஷதன்மையாக மாசுபட்டுள்ளதோடு குடிநீருக்கு பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது.

 

Industrial waste water issue

 



ஆழ்குழாய் கிணற்று நீரை மீன் வளர்ப்பு குட்டையில் விட்டதால் மீன்குஞ்சுகள் அனைத்தும் இறந்து விட்டதாக  விவசாயி கனகராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார். காகித ஆலையிலிருந்து சுத்திகரிக்கப்படாமல் விஷகழிவு நீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் நிலத்தடி நீர் மாசடைந்த விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதோடு கால்நடைகளுக்கும் மலட்டுத்தன்மை ஏற்பட்டுள்ளதாக கூறும் இப்பகுதி விவசாயிகள் கழிவுநீரை வெளியேற்றும் காகித ஆலைகள் மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். 

விஷ கழிவு நீரை வெளியேற்றும் கொலைகாரர்களால் பரிதாபமாக மீன்கள் செத்து விட்டது. இந்த நீரைத்தான் கால்நடைகளும் மக்களும் பயன்படுத்துகிறார்கள். சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டுத்துறையின் அமைச்சராக இருக்கும் கே.சி. கருப்பணன் மேடை தோறும் வாய்க்கு வந்தபடி ஏதேதோ பேசுகிறார். இத்தனைக்கும் அவரது மாவட்டத்தில் தான் அதிக விஷ கழிவுகள், சாய, தோல் கழிவுகள் அப்படியே நீர்நிலைகளிலும் வாய்க்கால், ஆறுகளிலும் கலக்கிறது. இது குறித்து அமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது. 

 

சார்ந்த செய்திகள்