சிதம்பரம் ரயில் நிலையத்தில் டிச 30-ந்தேதி காலை 11.00 மணி அளவில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லாத ரயில்களை நின்று செல்லவும், மயிலாடுதுறை - கோவை ரயிலை சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தியும் சிதம்பரம் இரயில் பயணிகள் நலச்சங்கம், அனைத்து கட்சிகள் மற்றும் சமூக நலச்சங்கங்கள் சார்பில் ரயில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சனிக்கிழமை உதவி ஆட்சியர் ரஷ்மிராணி தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டம் அவரது அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் திருச்சி ரயில்வே கோட்ட வர்த்தக மேலாளர் மோகன பிரியா முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, நகர செயலாளர் ராஜா, சிதம்பரம் நகர் மன்ற தலைவர் முத்துகுமரன், இந்திய கம்யூ. கட்சி நிர்வாகிகள் வி.எம்.சேகர், தமிமுன்அன்சாரி, ரயில் பயணிகள் நலச்சங்கத் தலைவர் அப்துல் ரியாஸ், ஒருங்கிணைப்பாளர் சிவராம வீரப்பன், அதிமுக நகரச் செயலாளர் செந்தில்குமார், நகர காங்கிரஸ் கட்சித் தலைவர் தில்லை ஆர்.மக்கீன், .முன்னாள் நகர்மன்ற தலைவர் எம்.எஸ்.என். குமார், பாமக நிர்வாகி கபிலன், சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் எஸ்.ரமேஷ்பாபு, ரயில்வே காவல் ஆய்வாளர்கள் சுதிர்குமார், ராமர் சுடலை ரயில்வே முதுநிலை பொறியாளர் பாலசுப்பிரமணியன், ரயில்வே அதிகாரிகள் அன்பரசன், அன்பு மாறன், நாராயணன், நிர்மல்குமார், விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கோயம்புத்தூர் மயிலாடுதுறை ஜனசதாப்தி ரயிலை நீட்டிப்பு செய்யச் சென்னை அலுவலகத்தில் உயர் அதிகாரியை சந்திக்க இன்றிலிருந்து 15 நாட்களுக்குள் அனுமதி வாங்கி தருவது... சிதம்பரம் இரயில் நிலையத்தில் நிற்காமல் செல்லும் தாம்பரம் செங்கோட்டை விரைவு இரயில், சென்னை காரைக்கால் விரைவு இரயில், இராமேஸ்வரம் அயோத்தி விரைவு இரயில் ஆகிய மூன்று இரயில்களில் தாம்பரம் செங்கோட்டை மற்றும் சென்னை காரைக்கால் இரயில்களை விரைவில் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது.
காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் சிதம்பரம் வழியாக திருச்சிக்கு ரயிலை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை வருகின்ற மார்ச் மாதத்திற்குள் நிறைவேற்றி தருவதாக திருச்சி கோட்ட வர்த்தக மேலாளர் தெரிவித்தார். இதனை ஏற்று டிச 30-ந்தேதி நடைபெற இருந்த இரயில் மறியல் போராட்டம் ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது.