
நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் இன்று மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. நேற்று முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் முதல் சுயேச்சை வேட்பாளர்கள் எனப் பலர் இறுதி நாள் என்பதால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் நூதன முறைகளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்வது முன்னரே பல தேர்தல்களில் நடந்துள்ளது.
தேர்தல் நேரங்களில் இதுபோன்ற நூதன சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கல்லில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 'எல்லாருமே திருடங்கதான் சொல்லப்போனால் குருடங்கதான்' என்ற பாடலை ஒலிக்கவிட்டபடி சாலையில் நடனமாடிக்கொண்டே வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.