Skip to main content

பெருகும் இணைய குற்றங்கள்; பணத்தை உருவினால் 1930க்கு கூப்பிடுங்க! சைபர் கிரைம் போலீசார் அறிவிப்பு!!

Published on 07/04/2022 | Edited on 07/04/2022

 

Increasing cyber crimes; Call it the 1930s for Money! Cyber ​​Crime Police Notice !!

 

போலி இணையதள இணைப்புகள் மூலம், ஒருவரின் வங்கிக் கணக்கில் இருந்து நூதன முறையில் பணத்தைத் திருடும் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள், 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம் என சைபர் கிரைம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 


சேலம், சூரமங்கலம் ஆசாத் நகரைச் சேர்ந்தவர் ஷாகுல். இவரின் வங்கிக் கணக்கு காலாவதி ஆகிவிட்டதாக அவருடைய செல்போனுக்கு தகவல் வந்தது. அது தொடர்பாக வந்த இணையதள இணைப்பில் நுழைந்த ஷாகுல், அதில் கேட்ட விவரங்களை பதிவிட்டார். இதையடுத்து சிறிது நேரத்தில் 1.58 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டு உள்ளதாக எஸ்.எம்.எஸ் வந்தது. இதைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். 


இதுகுறித்து ஷாகுல், சேலம் மாநகர சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார். ஆய்வாளர் சந்தோஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். விசாரணையில், ஷாகுலிடம் இருந்து எடுக்கப்பட்ட பணத்தில் இருந்து 1.08 லட்சம் ரூபாய் பேடிஎம் மூலமாக மின்கட்டணம் செலுத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் பேடிஎம் நிறுவனத்தின் சட்டப்பிரிவுக்கு தகவல் அனுப்பினர். அத்தொகை, மோசடியாக எடுக்கப்பட்டு மின் கட்டணம் செலுத்தப்பட்ட விவரங்களையும் தெரிவித்தனர். இதையடுத்து அத்தொகை மீட்கப்பட்டு, ஷாகுலின் வங்கிக் கணக்கில் மீண்டும் செலுத்தப்பட்டது. 


மற்றொரு சம்பவம்: 


சேலம், சங்கர் நகரைச் சேர்ந்தவர் இஸ்மாயில். இவர், இன்ஸ்டாகிராம் சமூக ஊடகப் பக்கத்தில் கணக்கு வைத்திருக்கிறார். அந்தப் பக்கத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பாக ஒரு விளம்பரம் வந்திருந்தது. அந்த விளம்பரத்துடன் வந்திருந்த ஒரு இணையதள இணைப்பைத் திறந்தார். அந்தப் பக்கத்தில் வேலைவாய்ப்பு தொடர்பாக விசாரிக்க ஒரு செல்போன் எண் கொடுக்கப்பட்டு இருந்தது. அந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசியபோது, எதிர் முனையில் பேசிய நபர், விசா, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றுக்கு 1.76 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று கூறி, ஒரு வங்கிக் கணக்கு எண்ணையும் கொடுத்துள்ளார். 


வெளிநாட்டு வேலை கனவில் இருந்த இஸ்மாயில், உடனடியாக அந்த நபர் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் அவர் கேட்டிருந்த தொகையை அனுப்பி வைத்தார். அதன்பிறகு அந்த நபரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இஸ்மாயில், இதுகுறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார். காவல்துறை விசாரணையில், மும்பையைச் சேர்ந்த ஒரு வங்கிக் கணக்கிற்கு இஸ்மாயில் அனுப்பிய பணம் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. 


அந்த வங்கி நிர்வாகத்தைத் தொடர்பு கொண்ட காவல்துறையினர், அத்தொகை மோசடி கும்பல் மூலம் பெறப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம் அத்தொகையை, இஸ்மாயில் கணக்கிற்கு அனுப்பி வைத்தது. மோசடி நபர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 


இதுகுறித்து சேலம் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முரளிதரன் கூறுகையில், ''செல்போனுக்கு வேலை, பொருள்கள் விற்பனை செய்வதாக வரும் போலி விளம்பரங்கள், வெளிநாட்டில் வேலைவாய்ப்பு தொடர்பாக அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ்களை பார்த்து யாரும் ஏமாற வேண்டாம். வங்கியில் இருந்து பேசுவதாக கூறுபவர்களை நம்பி அவர்கள் கேட்கும் வங்கி கணக்கு, ஓடிபி ரகசிய எண் விவரங்களை பகிரக்கூடாது. அவ்வாறு நீங்கள் பணத்தை இழந்துவிட்டால் உடனடியாக சைபர் கிரைமின் அவசர உதவி எண்ணான 1930க்கு அழைத்து புகார் அளிக்கலாம்'' என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்