கடலூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,000ஐ நெருங்கவுள்ளது. இந்நிலையில் நேற்று, திட்டக்குடி டி.எஸ்.பி. உள்ளிட்ட 71 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை நேற்று முன்தினம் வரை 1,917 ஆக இருந்த நிலையில் நேற்று 71 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,988 ஆக உயர்ந்துள்ளது.
திட்டக்குடி துணைக் காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் ஊழியர்கள், விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலக ஊழியர், அண்ணாகிராமம் பகுதி கால்நடை மருத்துவர், அதே பகுதியில் இருந்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் செவிலியர், சிதம்பரத்தைச் சேர்ந்த லேப் டெக்னீசியன், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி தனிமைப்படுத்தப்பட்ட சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 71 பேருக்கு நேற்று நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..
அதேசமயம் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திலிருந்து மேல்மருவத்தூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் கரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 60 வயது மூதாட்டி, முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த 40 வயது நபர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பண்ருட்டி மேலப்பாளையத்தைச் சேர்ந்த 72 வயது முதியவர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் கரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் 1,445 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 39,455 பேருக்கு கரோணா பரிசோதனை செய்யப்பட்டதில் 1,988 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. 413 பேர் கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், விடுதிகள், வீடுகளிலும், 120 பேர் வெளிமாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
இதனிடையே திட்டக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் மற்றும் அலுவலகத்தில் பணியாற்றிய 7 போலீசாருக்கு கரோனா தொற்று உறுதியானால் துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு மூடப்பட்டன.
மேலும் திட்டக்குடியில் வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் நகைக்கடை உரிமையாளர்கள் எனத் திட்டக்குடி தாலுக்காவில் 19-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் திட்டக்குடி பகுதியில் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.
ஆனாலும் கடலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமலிருப்பது கவலையை ஏற்படுத்துகிறது. கடைகள், உணவகங்கள், ஏ.டி.எம்மில் பணம் எடுக்கும் மக்கள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காததாலும், இளைஞர்கள் முகக்கவசம் அணியாமல் நகர்ப்புறங்களில் சுற்றித் திரிவதாலும். தொற்று பாதிப்பு அதிகரிக்கும் ஆபத்து நிலவுகிறது.
எனவே உடனடியாகச் சட்டத்திற்குப் புறம்பாக, தனிமனித இடைவெளியைப் பின்பற்றாத வணிகர்கள், பொதுமக்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்