Skip to main content

சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு!

Published on 12/12/2024 | Edited on 12/12/2024
Increase in water release from  Sathanur Dam

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனையடுத்து தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகத் தமிழகம் முழுவதும் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது.

அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம்,  சாத்தனூர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் சாத்தனூர் அணையிலிருந்து நீர் வெளியேற்றம் படிப்படியாக அதிகரிக்கப்படும்  என வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறப்பு 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கபட்டுள்ளது. அதே சமயம் அணைக்கு நீர் வரத்து 2 ஆயிரத்து 500 கன அடியாக உள்ளது. மேலும் நீர்வரத்துக்கு ஏற்ப நீர் வெளியேற்றம் படிபடியாக அதிகரிக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே பாதுகாப்பாக இருக்கும்படி தென்பெண்ணையாற்றின் கரையோர பகுதி மக்களுக்கும், சாத்தனூர் அணையின் கரையோர பகுதி மக்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வருவாய்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

முன்னதாக ஃபெஞ்சல் புயலின் போது பெய்த கனமழையின் போது சாத்தனூர் அணையில் இருந்து முன்னறிவிப்பு இல்லாமல், திடீரென விநாடிக்கு 1.68 லட்சம் கன அடி தண்ணீரை வெளியேற்றப்ப்பட்டது என எதிர்க்கட்சிகள் சார்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “ஃபெஞ்சல் புயலால் நீர்பிடிப்பு பகுதியில் பெரும் மழை பொழிந்தது.  இதனால் சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தது. அணையின் முழு கொள்ளவான 119 அடியை நெருங்கியது. தண்ணீர் வரத்தை முன்கூட்டியே கணித்து, அணையின் பாதுகாப்பு கருதி, 5 வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடப்பட்டன. அதன் பின்னரே தண்ணீர் தென் பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது. தமிழக அரசின் துரித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்