
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பக்கம் உள்ள ஒலைகுளத்தில் ஆடு திருடு போன விவகாரம் தொடர்பாக அங்குள்ள ஆடு மேய்க்கும் பட்டியலின தொழிலாளி பால்ராஜ் என்பவரை மிரட்டி சிவசங்குவின் காலில் விழுவைத்த விவகாரம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதையடுத்து எஸ்.பி. ஜெயக்குமாரின் உத்தரவுப்படி 7 பேர் கைது செய்யப்பட்டனர். ஒலைக்குளம் சென்ற எஸ்.பி., பால்ராஜூக்கு ஆறுதல் தெரிவித்து விட்டு பாதுகாப்பும் அளித்தார்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியரான சந்தீப் நந்தூரி, கோட்டாட்சியர் விஜயாவுடன் ஒலைக்குளம் சென்றவர் பால்ராஜூக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் சொன்னவர், சம்பவத்திற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றார்.
மேலும் தொழிலாளி பால்ராஜூக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்குவதுடன், அரசு சார்பில் வீடு கட்டித்தரப்படும், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு வழங்கப்படும் என்றார் ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
மேலும் இன்று சாயங்காலம் ஒலைக்குளம் கிராமத்தில் ஒற்றுமை அமைதியை ஏற்படுத்தும் வகையில் அனைத்து சமுதாயத்தினரும் அமர்ந்து சாப்பிடும் சமத்துவ உணவு விருந்துக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.