
புதுக்கோட்டை, நொடியூர் கிராமத்தில் கடந்த மாதம் 18 ந் தேதி, 13 வயது சிறுமி காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் படுகாயங்களுடன் கிடந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் அந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்பொழுது தனது மகளை யாரோ பாலியல் வன்கொடுமை செய்து விட்டார்கள் என சிறுமியின் தந்தை தெரிவித்திருந்தார். அந்த சிறுமியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுதொடர்பாக பல நாட்களாக போலீசார் விசாரணையில் ஈடுபட்ட நிலையில், பிரேத பரிசோதனையில் அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்படவில்லை என்பது உறுதியானது. இதனால் குழப்பமடைந்த போலீசார் இது ஏதேனும் முன்விரோதம் காரணமாக நடந்த சம்பவமா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
ஆனால் இறுதியில் சிறுமியின் தந்தையின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்களை சிறுமியின் தந்தை தெரிவித்தார். அதாவது பெண் மந்திரவாதி ஒருவரின் பேச்சை கேட்டு செல்வந்தராக ஆக வேண்டும் என்ற பேராசையில் பெற்ற மகளை தனது நண்பனுடன் சேர்ந்து தானே கொன்றதாக விசாரணையின்போது அவர் கூறியுள்ளார். புதுக்கோட்டையில் பெற்ற மகளை தந்தையே மூட நம்பிக்கை காரணமாக நரபலி செய்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.