
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் தனிப்பாதுகாப்பு அதிகாரி வீரபெருமாள் ஆஜராகியுள்ளார்.
ஜெயலலிதா மரணம் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையிலான கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை, டாக்டர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உட்பட, 30க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மருத்துவமனையில், ஜெ.,க்கு அளிக்கப்பட்ட, சிகிச்சை தொடர்பான ஆவணங்களை, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், விசாரணை கமிஷனில் தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசு சார்பிலும், சுகாதாரத் துறை செயலர், பல மருத்துவ ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். அவற்றை ஆய்வு செய்து, விசாரணை கமிஷனுக்கு தேவையான தகவல்களை தெரிவிக்க, அரசு மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்றை நியமிக்கும்படி, தமிழக அரசுக்கு, விசாரணை கமிஷன் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. அதிகாரி நியமனம் ஆனாலும், இன்னும் மருத்துவர்கள் குழு அமைக்கப்படவில்லை.
இந்நிலையில், பெருமாள்சாமி, வீரபெருமாள் என இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் ஜெயலலிதாவிற்காக தொடர்ச்சியாக இருந்துவந்தார்கள். இவர்கள் இருவருமே பல ஆண்டுகளாக ஜெயலலிதாவுடன் பாதுகாப்பு அதிகாரிகளாக இருந்து வந்தனர். இந்நிலையில் சசிகலா தாக்கல் செய்த பிரமான பத்திரத்தில் இவர்கள் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதால் இவர்கள் விசாரணை ஆணையத்தில் ஆஐராக சம்மன் அனுப்பப்பட்டது.
இதையடுத்து, இன்று காலை 10 மணி அளவில் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் வீரபெருமாள் ஆஜரானார். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.