சேலம் மாவட்டம் இடைப்பாடி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட ஆவணிப்பேரூர் கீழ்முகம் கிராத்தில், சரபங்கா நதியின் குறுக்கே ரூ.1.90 கோடியில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது. இதேபோல் சமுத்திரம் பகுதியில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி ரூ.1.14 கோடியிலும், கொங்கணாபுரம் வாரச்சந்தையில் ரூ.1 கோடியில் மேம்பாட்டுப் பணிகளும் என மொத்தம் 17 திட்டப்பணிகள் ரூ.5.87 கோடியில் நிறைவு பெற்றுள்ளன.
இத்திட்டப்பணிகளின் துவக்க விழா, புதிய மேம்பாலம் திறப்பு விழா ஆவணிப்பேரூர் கிராமத்தில் சனிக்கிழமை (ஜூன் 8, 2019) நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய திட்டப்பணிகளையும், புதிய மேம்பாலத்தையும் துவக்கி வைத்தார். அவர் பேசியதாவது:
கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது வாக்குறுதி அளித்தபடி கவுண்டம்பட்டி, வெள்ளாண்டிவலசு பகுதி மக்களுக்காக ஒரு பாலம் திறக்கப்பட்டு உள்ளது. இந்த பாலத்தை திறந்துள்ளதன் மூலம் இங்குள்ள மக்கள் நைனாம்பட்டி அரசு மருத்துவமனைக்கும், அங்குள்ள அரசுப்பள்ளிக்கும் செல்ல வேண்டிய தொலைவு குறைந்துள்ளது.
இப்பகுதி மக்களுக்குத் தேவையான குடிநீர், சாலைகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்துள்ளேன். நஞ்சுண்டேஸ்வரர் கோயில் புதுப்பிக்கப்படுகிறது. இடைப்பாடி பேருந்து நிலையம் அருகே, புதிய திருமண மண்டபம் கட்டப்படுகிறது.
எடப்பாடி பகுதி மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்காக அங்கு புதிய கலைக்கல்லூரி கட்டப்பட்டு உள்ளது. வனவாசியில் ரூ.58 கோடியில் பாலிடெக்னிக் கல்லூரியும் தொடங்கப்பட்டு உள்ளது. விரைவில் இந்த பகுதியில் சிட்கோ தொழில்பேட்டை அமைய உள்ளது.
தேர்தலின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் இதுவரை 85 சதவீதம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இடைப்பாடி, ஜலகண்டாபுரம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலைத் திட்டம் கொண்டுவரப்பட உள்ளது. அதேபோல் திருச்செங்கோட்டில் இருந்து ஓமலூர் வரை நான்கு வழிச்சாலைத் திட்டம் கொண்டு வரப்படும்.
இடைப்பாடி தொகுதியில் கல்வி, மின்சாரம், சாலைகள் என கிட்டத்தட்ட எல்லா பணிகளையும் நிறைவேற்றி இருக்கிறோம். இப்போது மக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.