திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கவரப்பட்டியைச் சேர்ந்தவர் பழனிவேல். கூலித் தொழிலாளியான இவருக்கு 17 வயதில் மகள் இருந்தார். இந்நிலையில் அந்த சிறுமி சமீபத்தில் கர்ப்பம் தரித்த நிலையில், அவரது பெற்றோர் விசாரித்தபோது சிறுமியின் உறவினரான புதுக்கோட்டை மாவட்டம், நம்பம்பட்டி அருகே உள்ள பகவான்பட்டியைச் சேர்ந்த ராம்கி வயது 22 என்பவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகின்றது.
இதனால் சிறுமி 6 மாத கர்ப்பிணியானார். இந்நிலையில் ராம்கியின் குடும்பத்தினரிடம் சிறுமியின் குடும்பத்தினர் சென்று கேட்டபோது தரக்குறைவாக பேசி அனுப்பியதாக கூறப்படுகின்றது. இதனால் வேதனை அடைந்த சிறுமியின் குடும்பத்தினர் இதுதொடர்பாக கடந்த மே மாதம் 29 ம் தேதி மணப்பாறை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் ராம்கி மீது போக்சோ உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் ராம்கியை கைது செய்யவில்லை. இதையடுத்து சிறுமியின் குடும்பத்தினர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மணப்பாறை மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று ராம்கி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ராம்கி கைது செய்யப்படவில்லை. இதையடுத்துதான் கடந்த 6 ம் தேதி சிறுமி தன்னுடைய பெற்றோருடன் மகளிர் காவல் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டது. அப்போதும் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில்தான் மிகுந்த மனவேதனைக்கு ஆளான சிறுமி, இன்று வீட்டில் விஷம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனே அவர் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமி கர்ப்பம் தரித்த நிலையில், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில், திருச்சி மத்திய மண்டல ஜ.ஜி.ஜெயராம், டி.ஜ.ஜி.ஆனி விஜயா, எஸ்.பி.ஜியாவுல் ஹக் ஆகியோர் மணப்பாறை காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் லெட்சுமியின் நடந்த சம்பவம் பற்றி கேட்டறிந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் சிறுமியின் தாய் தன்னுடைய மகளை தற்கொலைக்கு தூண்டியதாக வையம்பட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், ராம்கி மீது சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாகவும், பெண் வன்கொடுமை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து திருச்சி மத்திய மண்டல ஜ.ஜி.ஜெயராம் கூறுகையில்,
“சிறுமிகளுக்கு எதிராக நடைபெறும் குற்றசம்பவங்களை தடுத்திடும் வகையில், பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது, கிராமங்களுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இதுமட்டுமின்றி சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.