/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_1528.jpg)
இறக்குமதி காருக்கான நுழைவு வரி செலுத்திவிட்டதாக இயக்குனர் ஷங்கர் தெரிவித்ததை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், அவர் தொடர்ந்த வழக்கை முடித்துவைத்தது.
இயக்குனர் ஷங்கர், கடந்த 2012ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து ‘ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்’ மாடல் சொகுசு காரை இறக்குமதி செய்து, கே.கே.நகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவுசெய்யச் சென்றபோது, வணிக வரித் துறையிடம் நுழைவு வரி செலுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து ஷங்கர் தொடர்ந்த வழக்கில், 15 சதவீத நுழைவு வரியைச் செலுத்தி விட்டு, வாகனத்தைப் பதிவு செய்துகொள்ள உத்தரவிடப்பட்டது.
அதன்படி குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி காரை பதிவு செய்து பயன்படுத்தி வரும் நிலையில், ஷங்கர் தொடர்ந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது ஷங்கர் தரப்பில் ஆஜரான வக்கீல் சாய்குமரன், நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, நுழைவு வரி செலுத்தும்படி 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி வணிக வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதால், பாக்கித் தொகை 37 லட்சத்து 40 ஆயிரத்து 979 ரூபாயை அதே அண்டு செப்டம்பர் 28ஆம் தேதி செலுத்தி விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
இதற்கிடையில், இறக்குமதி கார்களுக்கு விதிக்கப்பட்ட நுழைவு வரியை எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து வழக்குகளின் விவரங்களையும் அறிக்கையாக தாக்கல் செய்ய வணிக வரித்துறை ஆணையருக்கு நேற்று உத்தரவிட்டதன்படி, வழக்குகளின் விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகிறார்களா என அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி தகவல் கோரினார்.
அதற்கு விளக்கம் அளித்த அரசு வழக்கறிஞர், உயர் நீதிமன்ற உத்தரவிற்குப் பின் வணிக வரித்துறை உதவி ஆணையர்களை இணைத்து வாட்ஸ் அப்பில் ஒரு குழு தொடங்கி, அதன்மூலம் விவரங்களைச் சேகரித்து வருவதாகத் தெரிவித்தார். தமிழ்நாடு வணிக வரித்துறை ஆணையர் தற்போது கோவையில் கரோனா பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால், சற்று கால தாமதம் ஏற்படுவதாகவும், உதவி ஆணையர்களிடம் தகவல் பெற்றவுடன், விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)