நடந்துமுடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கூட்டணியை விட எதிரணிக்கு அதிகமான இடங்கள் கிடைப்பதை ஏற்க முடியாத அதிமுகவினர் ஆங்காங்கே பிரச்சனைகளில் ஈடுபட்டதுடன் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட விடாமல் அதிகாரிகளை தடுத்து வந்தனர். மேலும் தோற்றவர்களையும் முறைகேடாக வென்றதாக அறிவிக்க வைத்துள்ளனர். சான்றிதழ்களையும் பெற்றுச் சென்றனர். பல இடங்களில் தபால் வாக்குகளைக் கூட எண்ணாமல் வெற்றியை மாற்றி அறிவித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி என வாக்கு எண்ணிய அதிகாரிகள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சுயேட்சை வேட்பாளர் வெற்றி என சான்றிதழ் எழுதச் சொல்லி அதிமுக ஒ செ வாங்கிக் கொண்டு சான்றிதழுடன் சுயேட்சை வேட்பாளரையும் காரில் ஏற்றிக் கொண்டு பறந்தார். உண்மையாக வென்ற காங் வேட்பாளர் கதறி அழுதுவிட்டு மண்ணைவாரி இறைத்துவிட்டு வீட்டுக்கு வந்தவர் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
இப்படித்தான் புதுக்கோட்டை மாவட்ட குழு 3 வது வார்டில் ( குண்றாண்டார்கோயில் ஒன்றியப்பகுதி) திமுக செல்வமும், அதிமுகவில் முத்து சுப்பிரமணியனும் போட்டியிட்டனர். 2 ந் தேதி வாக்கு எண்ணிக்கை கீரனூரில் நடந்த போது திமுக வேட்பாளர் செல்வம் 1780 ஓட்டுகள் அதிகம் பெற்றுள்ள நிலையில் அந்த வெற்றியை அறிவிக்கக் கூடாது என்று கந்தர்வகோட்டை அதிமுக எம்எல்ஏ நார்த்தாமலை ஆறுமுகம் வாக்கு எண்ணும் அதிகாரிகளிடம் சொல்லிக் கொண்டிருந்தார். இதை அறிந்த திமுக வடக்கு மா.செ செல்லப்பாண்டியன் தலைமையில் திரண்ட திமுக கூட்டணிக் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்புகள் ஏற்பட்ட நிலையில் தேர்தல் அதிகாரியான மாவட்ட வழங்கல் அதிகாரி அக்பர்அலி 3 ந் தேதி அதிகாலை உண்மையாக வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் செல்வத்திடம் சான்றிதழ் வழங்கினார்.
இந்தநிலையில் தான் ஞாயிற்றுக் கிழமை தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா புதுக்கோட்டை காமராஜபுரத்தில் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி தலைமையில் அமைச்சர் விஜயபாஸ்கர் பொங்கல் பரிசுகளை வழங்கினார். இந்த விழாவில் மா.செ வைரமுத்து, கந்தர்வகோட்டை எம்எல்ஏ ஆறுமுகம், அதிமுக ந.செ பாஸ்கர், முன்னாள் எம்எல்ஏ நெடுஞ்செழியன் மற்றும் அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
விழாவில் மாவட்ட வழங்கல் அலுவலர் அக்பர்அலி பரிசுகளை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது மேடையில் நின்ற ஆறுமுகம் எம்எல்ஏ மாவட்ட வழங்கல் அலுவலர் அக்பர் அலிலை கீழே இறங்குடா என்று ஒருமையில் தகாத வார்த்தையில் பேச, அருகில் நின்ற ந.செ பாஸ்கரும் தன் பங்குக்கு ரொம்பவே பேசினார்கள். நேர்மையான அதிகாரிக்கு நடந்த இந்த அவமரியாதையை மேடையில் நின்ற அமைச்சர் விஜயபாஸ்கர் பார்த்துக் கொண்டிருந்தார்.
பேசியவர்களை தடுக்கவும் இல்லை. அருகிலேயே ஆட்சியரும் நிற்க.. இவ்வளவு பேர் முன்னிலையில் எம்எல்ஏ தரம் தாழ்ந்து பேசியதைப் பார்த்து கண்களில் வந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு மேடையிலிருந்து ஒதுங்கினார் அதிகாரி அக்பர்அலி.
இந்த சம்பவம் குறித்து அமைச்சரிடம் புகாரும் கூறியுள்ளார். ஆனால் அரசு விழாவில் ஒரு மாவட்ட அதிகாரியை தரம்தாழ்ந்து பேசிய எம்எல்ஏ மற்றும் ந.செ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் அனைத்து சங்கங்களையும் இணைத்து போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று சொல்லும் அலுவலர்கள் அரசாங்கத்தின் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சிகளை புறக்கணிப்போம் என்கிறார்கள்.
மாவட்டம் முழுவதும் ஆளும் கூட்டணிக்கு எதிராக மக்கள் வாக்களித்திருப்பதால் வாக்கு எண்ணிக்கையின் போது ஆளுங்கட்சிக்கு ஆதரவாக முறைகேட்டில் ஈடுபடாத அதிகாரிகளை வஞ்சம் தீர்ப்பது தான் ஜனநாயகமா?