
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22ஆம் தேதி (22.04.2025) பயங்கரவாதக் கும்பல் கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இரண்டு முறை பாகிஸ்தான் ஏவுகணை சோதனை நடத்தியது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் நாளை (07/05/2025) நாடு தழுவிய போர் பாதுகாப்பு ஒத்திகை நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது.

அதன்படி வான்வெளி தாக்குதல் குறித்து எச்சரிக்கை சைரன்களை இயக்கி ஒத்திகை செய்வது; தங்களை தாங்களே பாதுகாத்தல் குறித்த பயிற்சியை மக்களுக்கு தரவது; முக்கிய தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றை எதிரிகள் கண்ணில் இருந்து மறைக்க ஏற்பாடு செய்வது தொடர்பான ஒத்திகை; போர் நேரத்தில் அவசரக் காலத்தில் மக்களைப் பாதுகாப்பாக எப்படி வெளியேற்றுவது என்பது குறித்த ஒத்திகை; எதிரிகள் தாக்குதலின் போது மின் விளக்குகளை அணைப்பது குறித்த ஒத்திகை; உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்களை சேமித்து வைப்பது; தாக்குதல் நடந்தால் தீயணைப்பு துறை, பேரிடர் மீட்புத்துறை எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்த ஒத்திகை உள்ளிட்ட பாதுகாப்பு ஒத்திகைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த பரபரப்பு சூழலுக்கு மத்தியில் 'பிரதமர் மோடிக்கு மூன்று நாட்களுக்கு முன்னரே தாக்குதல் நடத்துவது தெரியும்' என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். ராஞ்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ''தீவிரவாத தாக்குதல் நடக்கப்போவது மத்திய அரசுக்கு முன்பே தெரியும். குறிப்பாக மூன்று நாட்களுக்கு முன்பாகவே புலனாய்வு அமைப்பு பிரதமர் மோடிக்கு தாக்குதல் தொடர்பான தகவலை கொடுத்திருக்கிறார்கள். அதனால் தான் காஷ்மீருக்கு செல்ல திட்டமிட்டிருந்த அவருடைய பயணமானது ரத்து செய்யப்பட்டது. பிரதமர் மோடி அவருடைய உயிருக்கு கொடுக்கும் மதிப்பை சுற்றுலாப் பயணிகளின் உயிருக்கு ஏன் கொடுக்கவில்லை. எதற்காக காஷ்மீரில் பாதுகாப்பை பலப்படுத்தாமல் விட்டீர்கள்.

எல்லை பாதுகாப்பு படை; துணை ராணுவ படை; ராணுவம் இருக்கிறது. இவற்றையெல்லாம் உஷார் படுத்தி பாதுகாப்பை ஏன் உறுதி செய்யவில்லை? அதேநேரம் தீவிரவாதத்தை பொருத்தமட்டில் எப்போதும் காங்கிரஸ் தீவிரவாதத்திற்கு எதிராக இருக்கும். இதில் அரசு எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் நாங்கள் துணை நிற்போம். இந்த தாக்குதல் நடந்த பிறகு நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கூட அரசு எடுக்கும் முடிவுக்கு நாங்கள் துணை நிற்போம் என்றுதான் உறுதி அளித்தோம். ஆனால் இந்த தாக்குதல் குறித்து புலனாய்வு அமைப்பு தகவல் கொடுத்த பின்னரும் பிரதமர் அலட்சியமாக இருந்துள்ளார்'' என மிகப் பெரிய குற்றச்சாட்டை வைத்துள்ளார்.