குடிநீர் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த 7 தலித் குடும்பங்களை வெளியே வரமுடியாத வகையில் கம்பி வேலிகொண்டு பொது பாதை அடைக்கப்பட்டுள்ள அவலநிலை பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் மடப்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட கோவில்பத்து தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். அவரது மனைவி மடப்புரம் ஊராட்சி மன்றத் தலைவியாக இருந்து வருகிறார்.
இந்தச் சூழலில் பல ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் வசிக்கும் கள்ளத்திடல் பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக, கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் கடந்த வாரம் வாழக்கரையில் இருந்து குடிநீர் குழாய் பதிக்கும் பணியை தொடங்கினர். இந்த நிலையில் கோவில்பத்து தெரு அருகே குடிநீர் குழாய் பதிப்பதற்கு அதே பகுதியைச் சேர்ந்த சபாநாதன் என்பவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ரமேஷ் தரப்பிற்கும், சபாநாதன் தரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டு, ரமேஷ் மீது திருக்குவளை போலீசார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.
இந்த நிலையில், குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்த சபாநாதன் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்று கள்ளத்திடல் பகுதியில் வசிக்கும் ரமேஷ் உட்பட 7 குடும்பத்தினர் செல்லும் பாதையைக் கம்பி வேலி கொண்டு அடைத்துள்ளார். ஆற்றங்கரையை ஓட்டி கம்பி வேலி கொண்டு அடைக்கப்பட்டிருப்பதால், 7 குடும்பங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டவர்கள் வெளியே செல்லமுடியாமல் தவிக்கின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்லவும், குடிநீர் எடுத்து செல்லவும், குழந்தைகள் பள்ளிக்கு செல்லவும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இதைப் பற்றி அந்தப் பகுதியில் உள்ளவர்கள் கூறுகையில், “நாங்கள் தலித் மக்கள் என்பதால் கம்பி வேலி கொண்டு அடைத்து தகாத வார்த்தைகளால் பேசுகின்றனர். சபாநாதன் மீது திருக்குவளை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்கிறார்கள். வேலி அடைக்கப்பட்டுள்ள இடத்தில் 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்த பாதையை தற்போது அடைத்துள்ள சபாநாதன், அந்த இடங்கள் அனைத்தும் தன்னுடைய பட்டா நிலம் என்று காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் விளக்கம் அளித்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
அரசு புறம்போக்கு இடம் அவருடையது என்றாலும், எஞ்சியுள்ள ஆற்றங்கரை ஓரத்தில் இருக்கும் புறம்போக்கு இடத்தில் குடிநீர் குழாய் கொண்டு வந்து, குடிநீர் கிடைக்க வழிவகை செய்து, வேலியை அகற்றி தர வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.