ஈரோடு, புதிய ஆசிரியர் காலனி 5-வது வீதியை சேர்ந்தவர் கார்த்திக் 40 வயது. அவரது மனைவி 38 வயது ராதிகா. இவர் சென்ற மாதம் 13ஆம் தேதி ஈரோடு வில்லரசம்பட்டி என்ற பகுதியில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று புதிதாக வங்கிக் கணக்கு தொடங்கினார். பிறகு அந்த வங்கி மேலாளரை சந்தித்த ராதிகா இந்த வங்கியின் திண்டல் கிளையில் தான் கணக்கு வைத்திருப்பதாகவும் இப்போது புதிதாக மீண்டும் இங்கு ஒரு கணக்கு தொடங்கியிருப்பதாகவும் கூறிய அவர், மேலும் தன்னை ஒரு தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியின் மேலாளர் என அறிமுகம் செய்து கொண்ட ராதிகா தனக்கு கார் வாங்க வங்கியில் லோன் வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு வங்கியில் இருந்து சில ஆவணங்களை கேட்டுள்ளனர். அதன்படி ராதிகாவும் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் மேலாளராக வேலை பார்ப்பதற்கான அடையாள அட்டை 6 மாத சம்பள கணக்கு விவரம் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு செலுத்தப்பட்ட வருமானவரி விவரம் ஆகியவற்றை கொடுத்தார். மேலும், கோவையில் உள்ள ஒரு ஷோ ரூமிலிருந்து காருக்கான கொட்டேசன் வாங்கி வந்த அவர் அந்த வங்கி கிளையில் அதை கொடுத்தார்.
இதையடுத்து அந்த வங்கிக் கிளையில் இருந்து கோவையில் உள்ள கார் ஷோரூமுக்கு கடந்த 17ஆம் தேதி ரூபாய் 19 லட்சத்திற்கான வரைவோலை ராதிகாவிடம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சில நாட்கள் கழித்து வங்கியிலிருந்து கோவையில் உள்ள அந்த கார் ஷோரூமை தொடர்புகொண்டு காருக்கான ஆர்.சி ஒரிஜினல் அனுப்பி வைக்கும்படி கேட்டனர். அப்போது கார் ஷோரூமில் இருந்து பேசிய நபர், ராதிகா தனது பெயரில் கார் வாங்க வில்லை. அவர் அவரது கணவர் கார்த்திக் பெயரில் கார் வாங்கியதாக தெரிவித்துள்ளனர். மேலும், தங்களது வங்கியில் கடன் பெற்ற விவரம் வாகனத்தின் பதிவின்போது குறிப்பிடப்படவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து அதிர்ச்சி அடைந்த வங்கி நிர்வாகத்தினர் வரைவோலையின் நிலை குறித்து ஆய்வு செய்தபோது அந்த வரைவோலை பணமாக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும் ராதிகா கொடுத்த ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அவை அனைத்தும் போலியானது என தெரியவந்தது. இதைப்போல் ராதிகா போலி ஆவணங்கள் கொடுத்து ஏற்கனவே இரண்டு வங்கிகளில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதும் அப்போது தெரியவந்தது. இதையடுத்து வங்கி மேலாளர் பிரியா ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் புகார் கொடுத்தார். இதுகுறித்து விசாரணை நடத்த குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டார். போலீசார் அதிரடி விசாரணை நடத்தி ராதிகா மற்றும் அவரது கணவர் கார்த்திக் ஆகியோரை 29 ந் தேதி கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இப்படியெல்லாம் முறைகேடு செய்து வங்கியை ஏமாற்ற திட்டம் போட்டிருக்கிறார்கள் இளம் பெண்ணும் அவரது கணவரும்.